குறத்தி முடுக்கு - ஜி. நாகராஜன் - நாவல் வாசிப்பு
நூல்: குறத்தி முடுக்கு
ஆசிரியர்: ஜி.நாகராஜன்
பக்கங்கள்: 79
பதிப்பகம்: காலச்சுவடு
ஜி.நாகராஜன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை ஒரு
சந்தர்ப்பத்தில் படிக்க நேர்ந்த போது.....நல்ல மனைவி நல்ல
குடும்பம்...எழுத்தாளரும் நன்றாகப் படித்தவர்....ஆசிரியராகப்
பணியாற்றியவர்....ஆயினும் எது அவரை வாழ்நாள் முழுவதும் ஒரு நிம்மதியான, அமைதியான
வாழ்க்கை வாழ விடாமல் மனிதனின் இருண்ட பக்கங்களைத் தேடித் தேடி எழுத வைத்தது என
என்னை வியக்க வைத்தது....
இக்காலகட்டத்தில் கூட மற்ற எழுத்தாளர்கள் தொடத்தயங்கும்,
பதிவு செய்யத்
தயங்கும் மனிதனின் மறு பக்கங்களை அநாயாசமாக
எண்பதுகளில் எழுதிய போது சமகாலத்தில் எவ்வளவு எதிர்ப்புகளைச்
சம்பாதித்திருப்பார்...தற்போது கொண்டாடப்படும் பல எழுத்தாளர்கள் சம காலத்தில்
தூற்றப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவர்களே....இன்றும் அவ்வேதனை
நிகழ்வுகளை எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்ததை வேடிக்கை பார்த்துக்
கொண்டுதான் இருந்தோம் நாமும்....
குறத்தி முடுக்கு - ஜி. நாகராஜன் - தமிழ் நாவல் விமர்சனம்
குறத்தி முடுக்கு எனும் பகுதியில் வாழும் விலைமாதர்களின்
மனம், பேச்சு, வாழ்க்கை, காதல், திருமணம், பிள்ளை பெறும் ஆசை, சாதல் ஆகியவைகளை பற்றிய ஒரு
குறுநாவலே குறத்தி முடுக்கு...
தங்கம், மரகதம்,செண்பகம்,செல்லம், மீனாட்சி என்ற விலைமாதர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது
இப்புத்தகம்....
திருமணம் என்பது வீணான வேலை...காசு கொடுத்தால் சுகம் பெற
இயலும் போது திருமணம் எதற்கு என எண்ணும் ஒரு பத்திரிக்கைக்காரன் ஒரு விலைமகளான
தங்கத்தை திருமணம் செய்துகொள்ள விழைந்து அவளுக்காக கோர்ட் வரை சென்று பொய்சாட்சி அளிக்கிறான்...
அனைவரின் முன்னிலையிலும் தான் அவளைத் திருமணம்
செய்யவுள்ளதாகவும் பிரகடனம் செய்கிறான்...எனினும் அத்திருமணம் ஏன் நடக்கவிலை
என்பதை நாவலில் அறியவும்...
தான் அழைக்காத ஒருவனை அழைத்ததாகப் பொய் புகார் கொடுத்ததும்
அதைத் தாங்கிக்கொள்ள தங்கம் மறுப்பதும் நான் கூப்பிடாத ஒருத்தனை கூப்பிட்டதாக
எப்படி சொல்லலாம் வழக்கு நடத்தியே ஆகவேண்டும் என்று நிற்கிறாள் தங்கம்....
காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி அவளிடமிருந்து பணத்தையும்
நகையையும் பிடுங்கிப் போனாலும் அவனைக் காதலுடன் பார்க்கும் ஒருத்தி....
பெண்பிள்ளை பெற்றாக வேண்டுமென ஆசைப்பட்டு நிறைமாதமாக
இருந்தும் தொழில் செய்யவேண்டிய நிலையிலிருக்கும் ஒருத்தி என இந்த மனிதரால் ஆணாக
இருந்தும்... பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக அவர்கள் படும் பாடுகளை
எப்படித்தான் எழுதிக்குவிக்க முடிந்ததோ.....
குறத்தி முடுக்கு - தமிழ் நாவல் மதிப்புரை
சாவதற்கு தூக்குக் கயிறிட்ட நிலையிலும் ஒருவனைத்
திருப்திப்படுத்தி விட்டு சாக வேண்டியவளின் மனநிலையைக் கற்பனை கூட
செய்யமுடியவில்லை....
அப்பெண்கள் பேசுவதை அப்படியே பதிவு செய்து....அதன்
பின்னாலான உணர்வுகளை நம் கற்பனைக்கு விட்டுவிடும் உத்தி இந்நாவலில்
கடைப்பிடிக்கப்பட்டுள்ளது....
ஜி.நாகராஜன் எழுத்துக்களைப் பற்றி ஜெயமோகன் கூறியதாக
இணையத்தில் படித்தது பின்வருமாறு.....
"நுட்பங்களை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்கு ஜி.என். அசலான
புனைவுக்கலைஞன். தமிழின் இலக்கியசாதனையாளர்களில் ஒருவர். வெறுமே உடல்விவரணைகளை
மட்டும் வாசிக்கத்தெரிந்தவர்களுக்குத்தான் அவர் போதாதவர். துரதிருஷ்டவசமாக
பாலியல்சார்ந்த எழுத்துக்கு மொண்ணை வாசகர்களே அதிகமும் வருகிறார்கள். ஜி.என் ஐ
அவர்கள் மேல்மட்டம் வழியாகக் கடந்துசெல்கிறார்கள்."

No comments:
Post a Comment