Friday, July 3, 2026

அணுக்கம்

 அறிவு வளர்ந்தா

அணுக்கம் போயிடுது

நீ பெருசா

நான் பெருசான்னு...


04.07.26 

9.57am

Wednesday, July 1, 2026

நிலைமாறுதல்

 நிலைமாறுதல்


வாழ்க்கையின் மிகமுக்கியமான நிலைமாறுதல் காலகட்டத்தில் இருக்கிறேன்... 

நிறைய அறிகிறேன்... நிறைய புரிகிறது... நிறைய தெளிகிறேன்...

 நான் இந்தக் கட்டத்தில் சந்திக்கும் அனைவரும் எனக்கான பாடங்களை தினமும் அள்ளி வீசிச் செல்கின்றனர்... 

தின்று செரிக்க நேரமில்லாமல் வந்து குவிகிறது...நேரம் குறைவாக இருக்கிறது...

 எதை நோக்கி நான் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறேன்...

 எந்தத் திசை எனப் புரியாமல்... 

சூறாவளியில் சிக்கிச் சுழன்று கொண்டே அன்றாடத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது...

02.07.26 

12.00 மணி

Tuesday, June 23, 2026

சேர்ந்திருத்தலின் தனிமை

 

சேர்ந்திருத்தலின் தனிமை



நான் மட்டுமே காதலில் இருந்தேன் போலும்

உன் தாழ்வு மனப்பான்மையில் நீ மருகி மருகி சோர்ந்திருந்தாய் போலும்

காதலிக்கப்படாததன் வலியை வலிந்தேற்று


விடுவித்து விட்டேன் உன்னை


அதன்பொருட்டு


மேலும் ஒரு பழி சூழட்டும் என்னை...

Monday, June 22, 2026

கருப்பு பஞ்சுமிட்டாய்

 


காற்றில் கரைகிறது
கருப்புப் பஞ்சுமிட்டாய்...

Tuesday, June 9, 2026

போதாமையின் பரிசு




போதாமையின் பரிசு


எந்தையும் தாயுமிழந்தது 

போதாதெனில்

என்னுடலழித்துப் பெற்றளித்தது

போதாதெனில்

சொத்தழித்துத் தந்தது

போதாதெனில்

எனதிருப்பும் உனக்குப்

போதாதெனில் 

எனதில்லாமையை 

உனக்களித்தும்

போதாதெனில் 

போதாமையையே 

பரிசெனக் கொள்



Saturday, June 6, 2026

வெண்முரசு-முதற்கனல்- ஜெமோ

புத்தகம் : வெண்முரசு (முதற்கனல்)

ஆசிரியர்: ஜெயமோகன்

பக்கங்கள்: 684

மகாபாரதம் சிறு வயதில் தொலைக்காட்சித் தொடராகப் பார்த்தது தான்.மூல நூல் எதுவும் வாசித்ததில்லை.

கடந்த ஆண்டு பெரிதாக எந்தப் புத்தகமும் வாசிக்கவில்லை. எனவே இந்தாண்டு கண்டிப்பாக ஏதாவது வாசித்தாக வேண்டுமென்பது வருட ஆரம்பத்தில் எடுத்த முடிவு...

வெண்முரசு நாவல் வரிசையில் அம்பையின் கதை மட்டும் தனி புத்தகமாக ஏற்கெனவே படித்திருந்தேன்...

வழக்கமாகவே  poor time management கொண்டவள் நான்...வேலையும் நம் நேரம் நம் கையில் இல்லாத, நமக்கென நேரம் ஒதுங்கிக் கொள்ள இயலாத, பொதுமக்களுக்கு சேவை செய்யும்  வேலை...இதனாலேயே 30 தினங்கள் தொடர்ந்து படிக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு வாரம் வாசித்து விட்டு ஒதுங்கிக் கொள்ளும் வழக்கம் இருந்ததால் இம்முறை வெண்முரசு வாசிப்பிற்கு விருப்பம் தெரிவித்த நிலையில் 20 தினங்கள் தொடர்ந்து படித்துவிட்டேன் என்று பெருமைப்பட்ட பொழுதொன்றில் Kathiravan Rathinavel  கூட நீங்க எப்படி முடிச்சு விமர்சனம் எழுதறீங்கன்னு பாக்கத்தானே போறேன் என்று மண்டையில் கொட்டுவது போலக் கூறினார்...

அதற்கேற்ப பணிப்பளு காரணமாக இறுதியாக முதற்கனலை நிறைவு செய்யக் காலதாமதம் ஆன நிலையிலும்‌ கூட, இன்று நிறைவு செய்து தொடர்ந்து 50 நாட்களை 53 நாட்களில் நிறைவு செய்தது என் அளவில் சாதனையே...

அதற்குக் காரணம் ஜெமோவின் எழுத்து,வர்ணனை,கதாபாத்திரங்களை அவர் எடுத்தாண்ட விதம்,லாஜிக் பிசகாமல் ஒரு கதையுடன் ஒரு கதை பொருந்திப் போகச் செய்யும் கதை சொல்லல் உத்தி மற்றும் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பது போல் ஊழ்வினைகளும் தீச்சொற்களும் உறுத்து வந்து ஊட்டுவதை வாசகர்களுக்கு தக்க சமயத்தில் எடுத்துரைக்கும் கதை உத்திகள்...போன்றவையே...


தினமும் ஒவ்வொரு பத்தியிலும் ஏதாவது நான்கு புது சொற்களை கற்க முடிகிறது...அறங்களை அறிய முடிகிறது...அந்தக் காலத்து நியதிகளை அறிய‌ முடிகிறது...அந்தக் காலத்தில் அரச பெண்டிர் முதல் சாதாரண சூத குல பெண்கள் வரை அவர்களுக்கான உரிமைகள் கடமைகள் அவர்கள் எவ்வாறெல்லாம் அரசியல் பகடைக் காய்களாகவும்,பிள்ளை பெற்றுத் தரும் இயந்திரமாகவும், அதற்கெல்லாம் எதிர்த்து நின்றுவிட்டால் பித்தி/தெய்வம் என வணங்கப்பட்டதும் என கதை போகும் போக்கில் அனைத்தையும் அறிய முடிகிறது...

பாரதம் என்றாலே ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்...ஏகப்பட்ட கிளைக்கதைகள் தான்...அதில் ஒவ்வொரு கிளைக்கதையும் தனித்தனியாக எடுத்தாளப்பட்டதில் பல புதிய கதாபாத்திரங்கள் அதற்கான காரணகாரியங்களுடன் விளக்கப்பட்டுள்ளன...

இந்த உலகம் தோன்றியது முதல் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் பிறப்பு வரையிலான கதைக்களம் தான் முதற்கனல்...

நாகங்களால் உருவாகி நாகங்களை உலகிலிருந்து அழித்து அமைதியை நிலைநாட்ட சர்ப்பசத்ர வேள்வியில் விழச்செய்து அழித்து, அதை நாகவம்ச முனிவராலேயே முறியடிக்கப்பட்டு, மீண்டும் நாகங்கள் உருவாவதில் முடிவுறுகிறது முதற்கனல்...

இடையில் குருவம்சம் உருவான கதை...

குருவம்ச மன்னர்களின் வரிசை...

அதில் சிறந்த சில மன்னர்களின் கதை...

ஆஸ்திகன்,சந்தனு,சத்தியவதி,வியாசர்,பீஷ்மர்,அம்பை,சிகண்டி,விசித்ரவீரியன்,அம்பை,அம்பாலிகை போன்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கான கதைகள் கொண்டதே முதற்கனல்...

முதற்கனல் வாசிக்கும் போதே அதற்கான புலனக்குழுவில் உரிய ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள முடிவது சற்று இலகுவாகவும் உத்வேகத்தை ஊட்டுவதாகவும் உள்ளது...

முதற்கனல் வாசிக்கும் போது அதன் 50 அத்தியாயங்களில் எனக்குப்‌ பிடித்த  ஜெமோவின் பின்வரும் வரிகள் உங்களுக்காக...

"உன் முன் தலைவணங்கும் ஒவ்வொருவரும் உன்னிடம் அடைக்கலம் புகுந்தவர்களே… மன்னனிடம் குடிகள் தலைபணிவது அதன்பொருட்டே”

. “தட்சவிஷத்துக்கு மேல் வல்லமை கொண்டது ஒன்றே. ஆலாலகண்டனின் உடல் விஷம். தந்தையை வெல்லாதவனை மகள்மனம் ஏற்காது என்றறிவாயாக"

"பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும். விதியால் அல்ல, செய்கைகளாலும் அல்ல, எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள். வேழங்கள் மரங்களை விலக்கி, பாறைகளைப் புரட்டி, காடுகளைத் தாண்டிச்சென்று வேழங்களையே போரிடத் தேர்ந்தெடுக்கின்றன...20"

"பிரியமான முறையில் பாழ்படுத்திக் கொள்வதற்காகத்தானே வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது சிறியவனே?” என்றான். விசித்திரவீரியன் வருத்தம் விலகாமலேயே புன்னகை செய்தான்....25"

"உண்மையில் மனிதர்களுக்கு பிறர் பேசும் அனைத்தும் பொருளற்றவையாகவே தெரிகின்றன” என்றான். “பிறர் பேச்சில் அவர்கள் தன்னை மட்டுமே காண்கிறார்கள். தான் இடம்பெறாத பேச்சைக்கேட்டால் ஒன்று விலகிக்கொள்வார்கள். இல்லையேல் அதற்குள் தன்னை செலுத்த முயல்வார்கள்.”26

"நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் மனிதனைப்போல பரிதாபத்துக்குரியவன் வேறில்லை. அவனைப்போன்ற மூடனும் இல்லை.” நன்றாக மல்லாந்துகொண்டு “ஆனால் எப்போதும் மாமனிதர்கள்தான் அப்படி நினைக்கிறார்கள். பேரறிஞர்கள்தான் அவ்வாறு நிற்கிறார்கள். அவ்வாறு எவரோ பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மானுடம் வாழவும் முடிவதில்லை...26

ஆசைகளையும் அகங்காரத்தையும் வெல்லமுடியாதவனுக்கு ஞானமே விஷம். நான் செய்தவை எல்லாமே சரிதான் என வாதிடவே நான் அடைந்த ஞானம் எனக்கு வழிகாட்டுகிறது. அதைவெறுத்து பிய்த்துவீசினால் அவை திரண்டு என்னை குற்றம் சாட்டி கடித்துக் குதறுகின்றன. துரத்தி வந்து எள்ளி நகையாடுகின்றன...34"


"நீர்வழிப்படும் புணைபோன்றது வாழ்க்கை. ஆகவே பெரியோரை வியக்கவும் மாட்டேன். சிறியோரை இகழ்தலும் மாட்டேன். பிழையை வெறுப்பதுமில்லை. நிறையை வணங்குவதுமில்லை” என்றார் சாத்தன்...34

அறிவை ஏன் தடுக்கவேண்டும்?” என்று சிகண்டி சினத்துடன் கேட்டான். “ஏனென்றால் அறிவு என்பது அதிகாரம். அதிகாரம் பொறுப்புகளுடன் பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். எப்பொறுப்பை ஒருவன் வகிக்கிறானோ அப்பொறுப்புக்குரிய அறிவு மட்டுமே அவனுக்கு அளிக்கப்படவேண்டும். பொறுப்புடன் இணையாத அதிகாரம் அழிவை உருவாக்கும். அதுவே சமூகத்தை உருவாக்கும் முறையாக உருவாகிவந்துள்ளது” என்றார் அக்னிவேசர்....37(இது சிகண்டிக்கான கல்வியை மறுக்க அக்னிவேசர் கூறும் காரணங்கள்)

"உள்ளூர நிறைவின்மையை அறிபவர்கள் பொய்யாக அகந்தையை காட்டுவார்கள்”...47

கௌரவன்_ஆனந்த் நீலகண்டன்

நூல் : கௌரவன் (இரண்டாம் பாகம்)

பக்கங்கள்: 603

ஆசிரியர்: ஆனந்த் நீலகண்டன்

மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம்


        மகாபாரதத்தில் தீயவனாகச் சித்தரிக்கப்பட்ட துரியோதனன் தீயவனா அல்லது கௌரவமான கௌரவனா என்பதை ஆசிரியர் இந்நூலில் அலசி அள்ளித் தருகிறார்....நல்ல நடை...

அருமையான மொழிபெயர்ப்பு....


தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர் தான் மகாபாரதம்...ஆனால் இருதரப்பும் தர்மத்தை காத்து நிற்பவர் தாமே என எண்ணுவது தான் நகை முரண்.

வர்ணாசிரம தர்மத்தைக் கடைப்பிடிக்காமல், சூதனும் அரசனாகலாம், திறமை மட்டுமே அளவுகோல் என முழங்கும் சொந்த புத்தி கொண்ட பட்டத்து இளவரசனான துரியோதனன் அரசனானால் தமக்கு பாதிப்பு என எண்ணும் புரோகிதர்களும், வைசிய வியாபாரியான யுயுத்சுவும் வர்ணாசிரம தர்மத்தைக் காப்பாற்றினால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரம் பிழைக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரியணைக்கு எவ்விதப் பாத்தியதையும் அற்ற,   சொல்பேச்சுக் கேட்கும்  குழந்தைகளான பாண்டவர்களை அரியணை ஏற்ற  செய்த முயற்சியின் விளைவே மாபெரும் பாரதப் போராக விளைந்தது....

இதில் வெளிநாட்டினனான காந்தார இளவரசன் தன் பங்கிற்கு தன் நாட்டை அழித்த பரத நாட்டினரை அழிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறான்.

தன்னைத் தானே கடவுள் என அழைத்துக் கொள்ளும் கிருஷ்ணன் ஒரு பக்கம்.

தென்னாட்டில் பரசுராமன் ஒருபுறம் வர்ணாசிரமத்திற்கு எதிரான துரியனை அரியணை ஏற விடாமல் தடுக்கத் தன்னாலானதைச் செய்து கொண்டே இருக்கிறார்.

இவர்கள் அனைவரும் எதிர்க்கும் துரியன், தன் நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்பதை நிலைநிறுத்த  தன் சூத நண்பன் கர்ணனுடனும், பிராமண நண்பனான அசுவத்தாமனுடனும் இணைந்து வர்ணாசிரம தர்மத்தை எதிர்ப்பதால்,  தௌமியன் என்ற பிராமண குருவால் திட்டமிட்டுப் பரப்பப்படும்  வதந்திகளால் ஒவ்வொரு முறையும் தீயவனாகச் சித்தரிக்கப்படுகிறான்.

துரியனும், கர்ணனும் தம் மனம் கவர்ந்த பெண்ணைக் கூட அடைய முடியாமல் அரசியல் செய்கிறான் கிருஷ்ணன்..

போர்விதிகளை மீறமாட்டோம் என சத்தியம் செய்யுமாறு தர்மன் மற்றும் துரியனிடம் பிதாமகர் கோரும் போது தர்மன் உடனே சத்தியம் செய்கிறான்...ஆனால் துரியன் சத்தியம் செய்துவிட்டால் மீறக்கூடாதே எனத் தயங்கி...பிறகு சத்தியம் செய்கிறான்....கடைசி வரை போர் விதிகளை மீறாமல் இருந்தது துரியனா? தர்மனா?

துரோணர், கர்ணன், பிதாமகர், துரியன் என அனைவரையுமே விதிகளை எல்லாம் மீறி,  ஏமாற்றியே கொன்றனர் பாண்டவர்கள்....இதில் தர்மத்தைக் காத்தது யார்?

கிருஷ்ணனின் நாராயண சேனை உட்பட துரோணர், பிதாமகர்,கிருபர் என ஜாம்பவான்கள் அனைவரும் ஏன் துரியன் பக்கம் நின்றனர்?

அவன் செய்த ஒரே தவறு திரௌபதியைத் துகிலுரிக்க முயன்றது.....அதுவும் அவள் கணவன் சூதில் அவளை இழந்த பிறகு...சூதில் வைப்பது பிழையில்லையா.....துரியனின் மகளை கிருஷ்ணனின் மகன் சீரழிப்பதும் அவளை அவனுக்கே மணமுடித்து வைப்பதும் எவ்வகை தர்மம்....அவள் பெண்ணில்லையா?...அவளுக்கு நேர்ந்தது தர்மமா?

இது எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து கொண்டே இருப்பதுதான் நம் மனித இனத்திற்கான சாபக்கேடு....

அர்ஜூனனை விடத் திறமை வாய்ந்தவனாக இருந்தும் தாழ்ந்த சாதிக்காரன் என்ற ஒரே காரணத்திற்காக ஏகலைவனின் கட்டைவிரலை காவு கேட்டது எவ்வகை தர்மம்.....அதைத் தாண்டியும் சாதித்து காட்டுக்கு அரசனாக துரியனால் ஆக்கப்பட்ட, துரியனின் மகளுக்கு இன்னொரு தந்தை போலான ஏகலைவனின் மரணம் நெஞ்சை உலுக்குகிறது.

பலராமனுக்கும் கிருஷ்ணனுக்குமான உரையாடலைப் படிக்கும் இறை நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் நம் நம்பிக்கை சரிதானா என்ற சந்தேகம் வருவது உறுதி....கடவுளான கிருஷ்ணன் தன் இனத்தையும் தன் நகரையும் ஏன் காப்பாற்றிக்கொள்ள இயலவில்லை...

கடோத்கஜன், அரவான் ஆகிய இருவரும் பாண்டவர்களின் சூதமனைவியருக்குப் பிறந்து தம் தந்தைக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி அவர்கள் அன்பைப் பெற்று விட மாட்டோமா என்றே வாழ்ந்து இறுதியில் தம் தந்தையரிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவர்களுக்காக தங்கள் இன்னுயிர் ஈந்து பலியாவது மனதைப் பிசைகிறது.

மகாபாரதம் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் கூடவே சந்தேகங்கள் கிளர்ந்தெழுந்து கொண்டே இருக்கும் வகையில்தான் மகாபாரதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது...

"நான் நன்றி கெட்டவனாக அறியப்படுவதை விட தீயவனாக அறியப்படுவதை விரும்புவேன்." -கர்ணன்

"தான் ஒரு கடவுள் என முழங்கிக் கொண்டு, பிறகு தகாத செயல்களை ஏன் செய்ய வேண்டும்? அதற்கு பதிலாக, ஒரு சாதாரண மனிதனாக இருந்து, தன்னுடைய நம்பிக்கைகளுக்காகத் தலைநிமிர்ந்து உயிர் நீப்பது  சாலச் சிறந்தது"- துரியன்....


துரியனுடனான பயணத்தை நிறைவு செய்ய மனம் ஒப்பாமல் இன்னும் இன்னும் துரியனைப் பற்றி எழுத மாட்டாரா  என்று, இரண்டு பாகங்களாக, 1200 பக்கங்கள் படித்தும்....அதைத்  தாண்டியும் கேட்கிறது மனது...

நட்பும், காதலும்


 இடுக்கண் களையும் நட்புண்டு உன்

 கடைக்கண் மட்டும் காட்டிவிடு...🩷

Tuesday, June 2, 2026

காடேகிவிடு

காடேகிவிடு

காட்டேரியாகு

ஆணை விட 

ஆனை மேல்...

வாழ்வெனும் கீதம்

காகிதங்களுக்குள் தொலையாமல்..

காங்கிரீட் காடுகளில் அலையாமல்

வானுயர்ந்த மலைகளுக்கிடையே

வாழ்வளிக்கும் காட்டினூடே

சின்னஞ்சிறிய குடிசையும் ஒரு

சின்னஞ்சிறு மந்தையும்

போதுமே...


வண்ணத்துப்பூச்சி



கூட்டுக்குள் உன்னை அடைத்தாலும் 

அந்தக் கூட்டுப்புழு தனக்குத்தானே வண்ணம் பூசிக் கொள்வது போலே....

வெளியேறும் பொழுதினில் வண்ணமயமாக வெளியேறிவிடு...

தன்னைச் சிறை செய்யும் கைகளிலும் வண்ணங்களை வாரி இறைக்கும் வண்ணத்துப்பூச்சி போல.....

உன்னை நிந்திப்போரின் வாழ்க்கையையும் வண்ணமயமாக்கிச் சென்றுவிடு.....

பழிவாங்குதல் யார்க்கும் எளிதாம்...

அதனால் அது அவர்களுக்கே உரித்ததாயிருக்கட்டும்....

இதை படித்துப் பாருங்கள்....

அணுக்கம்

 அறிவு வளர்ந்தா அணுக்கம் போயிடுது நீ பெருசா நான் பெருசான்னு... 04.07.26  9.57am