சேர்ந்திருத்தலின் தனிமை
நான் மட்டுமே காதலில் இருந்தேன் போலும்
உன் தாழ்வு மனப்பான்மையில் நீ மருகி மருகி சோர்ந்திருந்தாய் போலும்
காதலிக்கப்படாததன் வலியை வலிந்தேற்று
விடுவித்து விட்டேன் உன்னை
அதன்பொருட்டு
மேலும் ஒரு பழி சூழட்டும் என்னை...
சேர்ந்திருத்தலின் தனிமை
நான் மட்டுமே காதலில் இருந்தேன் போலும்
உன் தாழ்வு மனப்பான்மையில் நீ மருகி மருகி சோர்ந்திருந்தாய் போலும்
காதலிக்கப்படாததன் வலியை வலிந்தேற்று
விடுவித்து விட்டேன் உன்னை
அதன்பொருட்டு
மேலும் ஒரு பழி சூழட்டும் என்னை...
எந்தையும் தாயுமிழந்தது
போதாதெனில்
என்னுடலழித்துப் பெற்றளித்தது
போதாதெனில்
சொத்தழித்துத் தந்தது
போதாதெனில்
எனதிருப்பும் உனக்குப்
போதாதெனில்
எனதில்லாமையை
உனக்களித்தும்
போதாதெனில்
போதாமையையே
பரிசெனக் கொள்
புத்தகம் : வெண்முரசு (முதற்கனல்)
ஆசிரியர்: ஜெயமோகன்
பக்கங்கள்: 684
மகாபாரதம் சிறு வயதில் தொலைக்காட்சித் தொடராகப் பார்த்தது தான்.மூல நூல் எதுவும் வாசித்ததில்லை.
கடந்த ஆண்டு பெரிதாக எந்தப் புத்தகமும் வாசிக்கவில்லை. எனவே இந்தாண்டு கண்டிப்பாக ஏதாவது வாசித்தாக வேண்டுமென்பது வருட ஆரம்பத்தில் எடுத்த முடிவு...
வெண்முரசு நாவல் வரிசையில் அம்பையின் கதை மட்டும் தனி புத்தகமாக ஏற்கெனவே படித்திருந்தேன்...
வழக்கமாகவே poor time management கொண்டவள் நான்...வேலையும் நம் நேரம் நம் கையில் இல்லாத, நமக்கென நேரம் ஒதுங்கிக் கொள்ள இயலாத, பொதுமக்களுக்கு சேவை செய்யும் வேலை...இதனாலேயே 30 தினங்கள் தொடர்ந்து படிக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு வாரம் வாசித்து விட்டு ஒதுங்கிக் கொள்ளும் வழக்கம் இருந்ததால் இம்முறை வெண்முரசு வாசிப்பிற்கு விருப்பம் தெரிவித்த நிலையில் 20 தினங்கள் தொடர்ந்து படித்துவிட்டேன் என்று பெருமைப்பட்ட பொழுதொன்றில் Kathiravan Rathinavel கூட நீங்க எப்படி முடிச்சு விமர்சனம் எழுதறீங்கன்னு பாக்கத்தானே போறேன் என்று மண்டையில் கொட்டுவது போலக் கூறினார்...
அதற்கேற்ப பணிப்பளு காரணமாக இறுதியாக முதற்கனலை நிறைவு செய்யக் காலதாமதம் ஆன நிலையிலும் கூட, இன்று நிறைவு செய்து தொடர்ந்து 50 நாட்களை 53 நாட்களில் நிறைவு செய்தது என் அளவில் சாதனையே...
அதற்குக் காரணம் ஜெமோவின் எழுத்து,வர்ணனை,கதாபாத்திரங்களை அவர் எடுத்தாண்ட விதம்,லாஜிக் பிசகாமல் ஒரு கதையுடன் ஒரு கதை பொருந்திப் போகச் செய்யும் கதை சொல்லல் உத்தி மற்றும் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பது போல் ஊழ்வினைகளும் தீச்சொற்களும் உறுத்து வந்து ஊட்டுவதை வாசகர்களுக்கு தக்க சமயத்தில் எடுத்துரைக்கும் கதை உத்திகள்...போன்றவையே...
தினமும் ஒவ்வொரு பத்தியிலும் ஏதாவது நான்கு புது சொற்களை கற்க முடிகிறது...அறங்களை அறிய முடிகிறது...அந்தக் காலத்து நியதிகளை அறிய முடிகிறது...அந்தக் காலத்தில் அரச பெண்டிர் முதல் சாதாரண சூத குல பெண்கள் வரை அவர்களுக்கான உரிமைகள் கடமைகள் அவர்கள் எவ்வாறெல்லாம் அரசியல் பகடைக் காய்களாகவும்,பிள்ளை பெற்றுத் தரும் இயந்திரமாகவும், அதற்கெல்லாம் எதிர்த்து நின்றுவிட்டால் பித்தி/தெய்வம் என வணங்கப்பட்டதும் என கதை போகும் போக்கில் அனைத்தையும் அறிய முடிகிறது...
பாரதம் என்றாலே ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்...ஏகப்பட்ட கிளைக்கதைகள் தான்...அதில் ஒவ்வொரு கிளைக்கதையும் தனித்தனியாக எடுத்தாளப்பட்டதில் பல புதிய கதாபாத்திரங்கள் அதற்கான காரணகாரியங்களுடன் விளக்கப்பட்டுள்ளன...
இந்த உலகம் தோன்றியது முதல் திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் பிறப்பு வரையிலான கதைக்களம் தான் முதற்கனல்...
நாகங்களால் உருவாகி நாகங்களை உலகிலிருந்து அழித்து அமைதியை நிலைநாட்ட சர்ப்பசத்ர வேள்வியில் விழச்செய்து அழித்து, அதை நாகவம்ச முனிவராலேயே முறியடிக்கப்பட்டு, மீண்டும் நாகங்கள் உருவாவதில் முடிவுறுகிறது முதற்கனல்...
இடையில் குருவம்சம் உருவான கதை...
குருவம்ச மன்னர்களின் வரிசை...
அதில் சிறந்த சில மன்னர்களின் கதை...
ஆஸ்திகன்,சந்தனு,சத்தியவதி,வியாசர்,பீஷ்மர்,அம்பை,சிகண்டி,விசித்ரவீரியன்,அம்பை,அம்பாலிகை போன்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கான கதைகள் கொண்டதே முதற்கனல்...
முதற்கனல் வாசிக்கும் போதே அதற்கான புலனக்குழுவில் உரிய ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள முடிவது சற்று இலகுவாகவும் உத்வேகத்தை ஊட்டுவதாகவும் உள்ளது...
முதற்கனல் வாசிக்கும் போது அதன் 50 அத்தியாயங்களில் எனக்குப் பிடித்த ஜெமோவின் பின்வரும் வரிகள் உங்களுக்காக...
"உன் முன் தலைவணங்கும் ஒவ்வொருவரும் உன்னிடம் அடைக்கலம் புகுந்தவர்களே… மன்னனிடம் குடிகள் தலைபணிவது அதன்பொருட்டே”
. “தட்சவிஷத்துக்கு மேல் வல்லமை கொண்டது ஒன்றே. ஆலாலகண்டனின் உடல் விஷம். தந்தையை வெல்லாதவனை மகள்மனம் ஏற்காது என்றறிவாயாக"
"பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும். விதியால் அல்ல, செய்கைகளாலும் அல்ல, எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள். வேழங்கள் மரங்களை விலக்கி, பாறைகளைப் புரட்டி, காடுகளைத் தாண்டிச்சென்று வேழங்களையே போரிடத் தேர்ந்தெடுக்கின்றன...20"
"பிரியமான முறையில் பாழ்படுத்திக் கொள்வதற்காகத்தானே வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது சிறியவனே?” என்றான். விசித்திரவீரியன் வருத்தம் விலகாமலேயே புன்னகை செய்தான்....25"
"உண்மையில் மனிதர்களுக்கு பிறர் பேசும் அனைத்தும் பொருளற்றவையாகவே தெரிகின்றன” என்றான். “பிறர் பேச்சில் அவர்கள் தன்னை மட்டுமே காண்கிறார்கள். தான் இடம்பெறாத பேச்சைக்கேட்டால் ஒன்று விலகிக்கொள்வார்கள். இல்லையேல் அதற்குள் தன்னை செலுத்த முயல்வார்கள்.”26
"நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் மனிதனைப்போல பரிதாபத்துக்குரியவன் வேறில்லை. அவனைப்போன்ற மூடனும் இல்லை.” நன்றாக மல்லாந்துகொண்டு “ஆனால் எப்போதும் மாமனிதர்கள்தான் அப்படி நினைக்கிறார்கள். பேரறிஞர்கள்தான் அவ்வாறு நிற்கிறார்கள். அவ்வாறு எவரோ பொறுப்பேற்றுக் கொள்ளாமல் மானுடம் வாழவும் முடிவதில்லை...26
ஆசைகளையும் அகங்காரத்தையும் வெல்லமுடியாதவனுக்கு ஞானமே விஷம். நான் செய்தவை எல்லாமே சரிதான் என வாதிடவே நான் அடைந்த ஞானம் எனக்கு வழிகாட்டுகிறது. அதைவெறுத்து பிய்த்துவீசினால் அவை திரண்டு என்னை குற்றம் சாட்டி கடித்துக் குதறுகின்றன. துரத்தி வந்து எள்ளி நகையாடுகின்றன...34"
"நீர்வழிப்படும் புணைபோன்றது வாழ்க்கை. ஆகவே பெரியோரை வியக்கவும் மாட்டேன். சிறியோரை இகழ்தலும் மாட்டேன். பிழையை வெறுப்பதுமில்லை. நிறையை வணங்குவதுமில்லை” என்றார் சாத்தன்...34
அறிவை ஏன் தடுக்கவேண்டும்?” என்று சிகண்டி சினத்துடன் கேட்டான். “ஏனென்றால் அறிவு என்பது அதிகாரம். அதிகாரம் பொறுப்புகளுடன் பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். எப்பொறுப்பை ஒருவன் வகிக்கிறானோ அப்பொறுப்புக்குரிய அறிவு மட்டுமே அவனுக்கு அளிக்கப்படவேண்டும். பொறுப்புடன் இணையாத அதிகாரம் அழிவை உருவாக்கும். அதுவே சமூகத்தை உருவாக்கும் முறையாக உருவாகிவந்துள்ளது” என்றார் அக்னிவேசர்....37(இது சிகண்டிக்கான கல்வியை மறுக்க அக்னிவேசர் கூறும் காரணங்கள்)
"உள்ளூர நிறைவின்மையை அறிபவர்கள் பொய்யாக அகந்தையை காட்டுவார்கள்”...47
நூல் : கௌரவன் (இரண்டாம் பாகம்)
பக்கங்கள்: 603
ஆசிரியர்: ஆனந்த் நீலகண்டன்
மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம்
மகாபாரதத்தில் தீயவனாகச் சித்தரிக்கப்பட்ட துரியோதனன் தீயவனா அல்லது கௌரவமான கௌரவனா என்பதை ஆசிரியர் இந்நூலில் அலசி அள்ளித் தருகிறார்....நல்ல நடை...
அருமையான மொழிபெயர்ப்பு....
தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர் தான் மகாபாரதம்...ஆனால் இருதரப்பும் தர்மத்தை காத்து நிற்பவர் தாமே என எண்ணுவது தான் நகை முரண்.
வர்ணாசிரம தர்மத்தைக் கடைப்பிடிக்காமல், சூதனும் அரசனாகலாம், திறமை மட்டுமே அளவுகோல் என முழங்கும் சொந்த புத்தி கொண்ட பட்டத்து இளவரசனான துரியோதனன் அரசனானால் தமக்கு பாதிப்பு என எண்ணும் புரோகிதர்களும், வைசிய வியாபாரியான யுயுத்சுவும் வர்ணாசிரம தர்மத்தைக் காப்பாற்றினால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரம் பிழைக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரியணைக்கு எவ்விதப் பாத்தியதையும் அற்ற, சொல்பேச்சுக் கேட்கும் குழந்தைகளான பாண்டவர்களை அரியணை ஏற்ற செய்த முயற்சியின் விளைவே மாபெரும் பாரதப் போராக விளைந்தது....
இதில் வெளிநாட்டினனான காந்தார இளவரசன் தன் பங்கிற்கு தன் நாட்டை அழித்த பரத நாட்டினரை அழிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறான்.
தன்னைத் தானே கடவுள் என அழைத்துக் கொள்ளும் கிருஷ்ணன் ஒரு பக்கம்.
தென்னாட்டில் பரசுராமன் ஒருபுறம் வர்ணாசிரமத்திற்கு எதிரான துரியனை அரியணை ஏற விடாமல் தடுக்கத் தன்னாலானதைச் செய்து கொண்டே இருக்கிறார்.
இவர்கள் அனைவரும் எதிர்க்கும் துரியன், தன் நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்பதை நிலைநிறுத்த தன் சூத நண்பன் கர்ணனுடனும், பிராமண நண்பனான அசுவத்தாமனுடனும் இணைந்து வர்ணாசிரம தர்மத்தை எதிர்ப்பதால், தௌமியன் என்ற பிராமண குருவால் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளால் ஒவ்வொரு முறையும் தீயவனாகச் சித்தரிக்கப்படுகிறான்.
துரியனும், கர்ணனும் தம் மனம் கவர்ந்த பெண்ணைக் கூட அடைய முடியாமல் அரசியல் செய்கிறான் கிருஷ்ணன்..
போர்விதிகளை மீறமாட்டோம் என சத்தியம் செய்யுமாறு தர்மன் மற்றும் துரியனிடம் பிதாமகர் கோரும் போது தர்மன் உடனே சத்தியம் செய்கிறான்...ஆனால் துரியன் சத்தியம் செய்துவிட்டால் மீறக்கூடாதே எனத் தயங்கி...பிறகு சத்தியம் செய்கிறான்....கடைசி வரை போர் விதிகளை மீறாமல் இருந்தது துரியனா? தர்மனா?
துரோணர், கர்ணன், பிதாமகர், துரியன் என அனைவரையுமே விதிகளை எல்லாம் மீறி, ஏமாற்றியே கொன்றனர் பாண்டவர்கள்....இதில் தர்மத்தைக் காத்தது யார்?
கிருஷ்ணனின் நாராயண சேனை உட்பட துரோணர், பிதாமகர்,கிருபர் என ஜாம்பவான்கள் அனைவரும் ஏன் துரியன் பக்கம் நின்றனர்?
அவன் செய்த ஒரே தவறு திரௌபதியைத் துகிலுரிக்க முயன்றது.....அதுவும் அவள் கணவன் சூதில் அவளை இழந்த பிறகு...சூதில் வைப்பது பிழையில்லையா.....துரியனின் மகளை கிருஷ்ணனின் மகன் சீரழிப்பதும் அவளை அவனுக்கே மணமுடித்து வைப்பதும் எவ்வகை தர்மம்....அவள் பெண்ணில்லையா?...அவளுக்கு நேர்ந்தது தர்மமா?
இது எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து கொண்டே இருப்பதுதான் நம் மனித இனத்திற்கான சாபக்கேடு....
அர்ஜூனனை விடத் திறமை வாய்ந்தவனாக இருந்தும் தாழ்ந்த சாதிக்காரன் என்ற ஒரே காரணத்திற்காக ஏகலைவனின் கட்டைவிரலை காவு கேட்டது எவ்வகை தர்மம்.....அதைத் தாண்டியும் சாதித்து காட்டுக்கு அரசனாக துரியனால் ஆக்கப்பட்ட, துரியனின் மகளுக்கு இன்னொரு தந்தை போலான ஏகலைவனின் மரணம் நெஞ்சை உலுக்குகிறது.
பலராமனுக்கும் கிருஷ்ணனுக்குமான உரையாடலைப் படிக்கும் இறை நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் நம் நம்பிக்கை சரிதானா என்ற சந்தேகம் வருவது உறுதி....கடவுளான கிருஷ்ணன் தன் இனத்தையும் தன் நகரையும் ஏன் காப்பாற்றிக்கொள்ள இயலவில்லை...
கடோத்கஜன், அரவான் ஆகிய இருவரும் பாண்டவர்களின் சூதமனைவியருக்குப் பிறந்து தம் தந்தைக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவி அவர்கள் அன்பைப் பெற்று விட மாட்டோமா என்றே வாழ்ந்து இறுதியில் தம் தந்தையரிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவர்களுக்காக தங்கள் இன்னுயிர் ஈந்து பலியாவது மனதைப் பிசைகிறது.
மகாபாரதம் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் கூடவே சந்தேகங்கள் கிளர்ந்தெழுந்து கொண்டே இருக்கும் வகையில்தான் மகாபாரதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது...
"நான் நன்றி கெட்டவனாக அறியப்படுவதை விட தீயவனாக அறியப்படுவதை விரும்புவேன்." -கர்ணன்
"தான் ஒரு கடவுள் என முழங்கிக் கொண்டு, பிறகு தகாத செயல்களை ஏன் செய்ய வேண்டும்? அதற்கு பதிலாக, ஒரு சாதாரண மனிதனாக இருந்து, தன்னுடைய நம்பிக்கைகளுக்காகத் தலைநிமிர்ந்து உயிர் நீப்பது சாலச் சிறந்தது"- துரியன்....
துரியனுடனான பயணத்தை நிறைவு செய்ய மனம் ஒப்பாமல் இன்னும் இன்னும் துரியனைப் பற்றி எழுத மாட்டாரா என்று, இரண்டு பாகங்களாக, 1200 பக்கங்கள் படித்தும்....அதைத் தாண்டியும் கேட்கிறது மனது...
காகிதங்களுக்குள் தொலையாமல்..
காங்கிரீட் காடுகளில் அலையாமல்
வானுயர்ந்த மலைகளுக்கிடையே
வாழ்வளிக்கும் காட்டினூடே
சின்னஞ்சிறிய குடிசையும் ஒரு
சின்னஞ்சிறு மந்தையும்
போதுமே...
கூட்டுக்குள் உன்னை அடைத்தாலும்
அந்தக் கூட்டுப்புழு தனக்குத்தானே வண்ணம் பூசிக் கொள்வது போலே....
வெளியேறும் பொழுதினில் வண்ணமயமாக வெளியேறிவிடு...
தன்னைச் சிறை செய்யும் கைகளிலும் வண்ணங்களை வாரி இறைக்கும் வண்ணத்துப்பூச்சி போல.....
உன்னை நிந்திப்போரின் வாழ்க்கையையும் வண்ணமயமாக்கிச் சென்றுவிடு.....
பழிவாங்குதல் யார்க்கும் எளிதாம்...
அதனால் அது அவர்களுக்கே உரித்ததாயிருக்கட்டும்....
பச்சை நரம்பு - அனோஜன் பாலகிருஷ்ணன்
புத்தகம்: பச்சை நரம்பு
எழுத்தாளர்: அனோஜன் பாலகிருஷ்ணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
பச்சை நரம்பு - தமிழ் சிறுகதை தொகுதி மதிப்புரை
வாசிப்பை நேசிப்போம் குழுவில் 2020 ன் பிற்பகுதியில் தான்
இணைந்தேன்.
அதனால் 2020 க்கான வாசிப்பு மராத்தானில் பங்கேற்க இயலவில்லை..
குழுவின் செயல்பாடுகளை ஒரு பார்வையாளராக மட்டும் கவனித்து
வந்தேன்...கடந்த ஆண்டு இரு புத்தகங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுதியதாய்
நினைவு....
வாசிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்து இருந்தாலும், வீட்டிலேயே ஒரு
சிறு நூலகம் அளவுக்கு புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தும் இலக்கு வைத்து
வாசித்ததில்லை...வாசித்த நூலுக்குரிய விமர்சனங்களையும் மனதிற்குள்ளேயே வைத்துக்
கொள்வது வழக்கமாக இருந்தது.....
2021லிருந்து இலக்கு வைத்து வாசிக்கத் துவங்க 2020 டிசம்பரில்
யோசித்திருந்தேன்...மாதம் இரண்டு புத்தகங்கள் என 25 புத்தகங்களை இலக்காக நிர்ணயிக்கலாம் என்பது எண்ணம்...
அதன்படி 2021 வாசிப்பு மராத்தானுக்கு எந்த புத்தகத்தில்
இருந்து ஆரம்பிக்கலாம் என யோசித்த போது எழுத்தாளர் திரு.பெருமாள் முருகன் அவர்கள்
ஒரு இளம் எழுத்தாளரைப் பற்றி பத்திரிக்கையில் பாராட்டி எழுதியிருந்தது ஞாபகம்
வந்தது...சரி அவரது புத்தகத்தை ஆண்டின் முதல் புத்தகமாக வாசிப்போம் என கிண்டிலில்
பதிவிறக்கம் செய்து வைத்திருந்தேன்.
10 சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பே அப்புத்தகம்...ஒவ்வொரு
சிறுகதையும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் வெளியானதாகையால்
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வெவ்வேறு வகையான கலவையான உணர்வுகளைத் தருவதாக
இருந்தன...
முதல் சிறுகதையைப் படித்து முடித்ததும் மனதில் எழுத்தாளரின்
முகத்தைப் பார்த்தாக வேண்டுமே என்ற எண்ணம் துளிர் விட்டது.....
முகநூலில் அவரது பெயரை வைத்துத் தேடிப்பார்த்து வியந்து
போனேன்....இவ்வளவு சிறுவயதில் எழுத்தில் எப்படி இவ்வளவு முதிர்ச்சி இருக்க
முடியுமென்று....அவ்விளம் எழுத்தாளர் வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்திவிட்டு
அடுத்தடுத்த சிறுகதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்....
பச்சை நரம்பு - அனோஜன் பாலகிருஷ்ணன் - சிறுகதை தொகுப்பு
ஆண்/பெண் பேதமின்றி இருவரின் மனநிலையையும் எவ்விதம் ஒரு
எழுத்தாளரால் இவ்வளவு கச்சிதமாகப் பதிவு செய்ய இயலும் என
ஆச்சரியப்படுத்துகிறார்... ஒவ்வொரு சிறுகதையும்.....யுத்த பூமியின் நிழல் படர்ந்த
மக்களின் வாழ்க்கையை அனாயாசமாகப் பதிவு செய்து கொண்டே வரும் வேளையில் எவரும்
எழுதத் தயங்கும், நொடியில் விரசமாகி விடக்கூடிய பாலியல் கதைகளையும் மிக
நுட்பமாக எழுத்தில் வடிக்கக்கூடிய கலை இவருக்கு எளிதில் கைவந்திருக்கிறது.....
இலங்கைத் தமிழ் நமக்கு ஆங்காங்கே இடறினாலும் படிக்கும்
வேகம் குறையவிடாத மொழிநடை இப்புத்தகத்தின் சிறப்பம்சம்.....
கண்டிப்பாக வாசிக்கலாம்....
உறைப்புளி - செல்வேந்திரன் - கட்டுரை தொகுதி மதிப்பீடு
நூல்: உறைப்புளி
ஆசிரியர்: செல்வேந்திரன்
பக்கங்கள்:87
நூலாசிரியரால் தி இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதப்பட்ட,
மற்றும் அவரது
மேடைப் பேச்சுகள் ஆகியவற்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தலைப்புகள் கொண்ட
கட்டுரைகளே இந்நூல்.
அனைத்துக் கட்டுரைகளுமே நேர்த்தியாக, எளிமையான மொழிநடையில்
முதல்முறை வாசிப்பவர் கூட புரிந்து கொள்ளும் வகையில் நேரிடையாக பொருள் கொள்ளும்
வகையில் எழுதப்பட்டவை மற்றும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடியவைதான்.
"தார்ச்சாலையில் தனித்து விடப்பட்ட கோழிக்குஞ்சு போல் கார்
பதறிக் கொண்டே இருந்தது".....புதிதாகக் கார் ஓட்டும் எந்த ஓட்டுநருடனும்
பயணித்த அனைவரும் உணர்ந்திருப்பினும் இந்த உவமை நயம் திரும்பத் திரும்பப் படித்து,
நம் வாழ்வில்
குறுக்கிட்ட அத்தகைய நிகழ்ச்சிகளை எண்ணிப்பார்த்து, ரசிக்கத் தூண்டியது...நமது
பதட்டங்கள் நம் கண்முன்னே திரும்பத் தோன்றின.
மிஷ்கின் அந்த ஓட்டுநரை நடத்திய விதம் மிஷ்கினை நேரிடையாக
அறிந்திராத நமக்கு அவர் யார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் அவரைப் பற்றி விமர்சனம் செய்யும் போக்கு அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில், மிஷ்கின் என்ற ஆளுமை பற்றி தெளிவு படுத்த முனைந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
"எந்தத் தகுதியும் இல்லாத ஒருவர் எந்த ஆளுமை மீதும் பீயடிக்க
முடியும்" என்பதை வாசிக்கும் போது நடைமுறை வாழ்க்கை யதார்த்தம் நம் முகத்தில்
அறைகிறது.
சம கால சமூகத்தின் நாற்றம் கூடுவதைக் கண்டும் காணாமல்
போகாமல் அதைச் சுட்டித் திருத்திக் கொள்ளச் செய்யும் எழுத்து......
நூலாசிரியர் எப்போதும் வலியுறுத்தும் வாசிப்பு பழக்கம்
குறித்த கட்டுரை இதிலும் இடம் பெற்றுள்ளது மொக்கை என்ற தலைப்பில்....
"ஆதார் அட்டையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்த வழியுண்டா என
பூங்கா ஜோசியனிடம் விசாரிக்கிறோம்" எனும் போது
எந்தவித புரிதலும் இல்லாத அறியாமையில் உழலும் இளைஞர்களைத் தோலுரித்துக்
காட்டுகையில் அடிவயிறு கலங்குகிறது எதிர்கால சமுதாயம் குறித்து...
என் வாழ்க்கையிலும் இது சமீபத்தில் நிகழ்ந்தது....எங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒரு இளைஞன் ரயில் டிக்கெட் பதிவு செய்வதை முறையாக ஏஜென்ட்டாகப் பதிவு செய்யாமல் தனது தனிப்பட்ட கணக்கிலிருந்து முன்பின் தெரியாத நபர்களுக்கு டிக்கெட் பதிவு செய்து கொடுத்துள்ளான்.
இதை அறிந்த ரயில்வே போலீசார்
அவனைக் கைது செய்து ஜாமீனில் வெளிவர இயலாத செக்சனில் முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்து சிறையில் அடைத்தது விட்டனர்....ஆறு நாட்கள் சிறையில் இருந்து, அச்சூழ்நிலை
காரணமாக, தண்ணீர் கூட அருந்தமுடியாமல் வாடி ஜாமீனில் வெளிவந்து தற்போது தினசரி காவல்
அலுவலகம் சென்று கையெழுத்திட்டு வருகிறான்.
முறையாக லைசென்ஸ் வாங்காமல் ஏன் இவ்வாறு செய்தாய் எனக்
கேட்டபோது....யாருமே எனக்கு சொல்லல.....எனக்குத் தெரியாது லைசென்ஸ் வாங்கனும்னு
என்று கூறினான்.
உறைப்புளி - கட்டுரை தொகுதி விமர்சனம்
எதுவுமே தெரியாமல் ஒரு விஷயத்தை எப்படி இவர்களால் செய்ய
முடிகிறது....அப்போதும் தன்மீது தவறு இல்லை இந்த சமூகம் சொல்லித் தரவில்லை என
சமூகத்தின் மீது பழியைப் போடும் இந்த மாதிரி இளைஞர்களை வைத்துக் கொண்டு வீட்டில்
தான் என்ன செய்யப் போகிறோம்...அல்லது நாட்டில்தான் என்ன செய்யப் போகிறோம்....
இவ்வாறாக 10 கட்டுரைகளும் வெவ்வேறு தளம் சார்ந்தவை....நமது வாழ்வியலோடு
பொருத்திப் பார்க்க முடியும் எழுத்து.... நிச்சயம் இளைஞர்களால்
வாசிக்கப்படவேண்டியவர் செல்வேந்திரன்.....
குகை - ஜெயமோகன் - நாவல் வாசிப்பு
நூல்:குகை
ஆசிரியர்: ஜெயமோகன்
பக்கங்கள்: 73
மன்னராட்சிக் காலங்களில், எதிரிகளிடமிருந்து தப்பிச்
செல்ல அரண்மனைகளின் அடியில் குகை போன்ற ரகசியப் பாதைகள் ஏற்படுத்தப்படுவதை ஒட்டிய
ஒரு கற்பனைக் கதை இது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு ஆளுக்கொரு அறையில்
திணிக்கப்பட்ட, மனம் பிறழ்ந்த, தன் மனக்குகையில் தானே சிக்கிய ஒருவன், அடுத்தவர்களின்
அந்தரங்கங்களை ஆராய்ந்து, அதில் அமிழ்ந்து, அவர்களைப் பின்தொடர்ந்து,
அவர்களின் அசிங்கங்களை அறிந்து அவர்களுக்கெதிரே பயன்படுத்த
எத்தனித்து, ஒருவழிப்பாதையான அம்மனக்குகைகளிலிருந்து வெளிவர இயலாமல்
தொலைந்து போன பலரில் இன்னுமொருவனானவனாக ஆவதே இக்குறுநாவலின்
கதை ஆகும்.
இக்காலத்திய மனித மனதின் எண்ணவோட்டங்களை, அதன்போக்கில்
சொல்லிக் கொண்டே செல்லும் போது, தொடர்ந்து அடுத்தடுத்த திருப்பங்களை நமது மனமே
எழுத்தாளருடன் சேர்ந்து எழுதத் துவங்கும் போது, நம்மைப் பார்த்து நமக்கே
பயமாகத்தான் இருக்கிறது.
இன்னும் இன்னும் என நமது மனம் எண்ணும் வேளையில் நல்ல
வேளையாக புத்தகம் முடிந்து விடுகிறது.....
படிக்கச் சிறிய புத்தகம்தான்.ஆனால் ஒரே மூச்சில்
படித்துமுடித்துவிடத் தூண்டுமளவு வரம் கொண்ட எழுத்து....
நம் மனதின் திறக்காத பக்கங்கள் எக்காலத்திலும் திறந்துவிடக்
கூடாதென்ற அச்சம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.....
கிழவனும் கடலும் - தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வாசிப்பு அனுபவம்
நூல்:கிழவனும் கடலும்
ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெமிங்வே
பதிப்பகம்: காலச்சுவடு
பக்கங்கள்: 168
கடல்.....கடலைப் பார்த்தால் ரொம்பவும் பயம் எனக்கு....ஆனால் பார்க்காமல் இருக்கவும் என்னால் ஆகாது.... அத்துணை பிரம்மாண்டத்திலும் எவ்வளவு பேரமைதி... பல்லாயிரம் உயிர்களை தன்னுள் அடக்கியிருக்கும் கடலைப் பார்க்காமல் இருக்க யாரால் முடியும்........எண்ணற்ற ஆபத்துகள் கொண்டதாக என்னை அச்சப்படுத்தும் கடலை......சாண்டியாகோவுடன் சேர்ந்து மீன்பிடிக்கச் சென்ற போது இன்னும் ஆழமாய் புரிந்து கொண்டதாய் ஒரு உணர்வு......
85 நாட்களாகக் கடலுக்குள் சென்றும் மீன்கள் ஏதும் சிக்காத அதிர்ஷ்டமில்லாதவன் என அறியப்படும் மீனவக் கிழவனே சாண்டியாகோ.....அவனுடன் ஒரு சிறுவன்....அந்த சிறுவனையும் நாற்பது நாள்களில் கிழவனிடமிருந்து பிரித்து வேறு படகில் அனுப்பி விடுகின்றனர் அவன் பெற்றோர்.
85
தனது அதிர்ஷ்ட
எண் எனக்கூறி கடலுக்குள் தனியாகச் சென்று மீன்பிடிக்கச் செல்லும் கிழவனின் மனநிலை,மனவுறுதி,தன்னம்பிக்கை,மூன்று நாட்கள்
தனிமையில் கடலுக்குள் இருக்க நேரிட்டும் தளராத மனம்...தனிமையில் ஒரு மனிதனின் மனம்
எப்படியெல்லாம் சிந்திக்கும் என்பதை எல்லாம் உணர்ந்து எழுத வேண்டுமானால் எர்னஸ்டோ
சான்டியாகோவாக வாழ்ந்திருக்க வேண்டும்....வாழ்ந்திருக்கிறார் என்பது அவரது
வாழ்க்கை சரித்திரத்திலிருந்து தெரிகிறது....
அந்த பெரிய மீனைப் பிடித்தவுடன் அந்த மீனுடன்
பேசுவதாகட்டும்....தனக்குத் தானே பேசிக் கொள்வதாகட்டும்......வலி என்ற ஒன்றை
சொல்லாமலே நமக்கும் கடத்துவதாகட்டும்....என்று....ஒரு மீனவனாகவே நான் அந்த படகில்
வாழ்ந்தேன்.....நான் தான் அவ்வளவு பெரிய மீனைப் பிடித்தேன்.....சுறாக்களுடன்
போராடி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தேன்.....
அச்சிறுவனைப் போலவே எனக்கும் ஆசையாக இருக்கிறது
அக்கிழவனிடம் மீன் பிடிக்கும் சாக்கில் இன்னும் வாழ்க்கைப் பாடம் கற்றுக்
கொள்ள....
வழக்கம்போல் சில துளிகள்....
"தோல்விக்காக மனிதன் படைக்கப்படவில்லை” என்றான் கிழவன். “ஒரு
மனிதனை அழிக்க முடியும். தோற்கடிக்க முடியாது.”
"மடியவேண்டும். “ஒ மார்லினே, மார்லினே, மனிதனைக்
கொல்வது எளிது, வெல்வது கடினம்.” "
நூறு நாற்காலிகள் - தமிழ் சிறுகதை வாசிப்பு அனுபவம்
நூல்: நூறு நாற்காலிகள்
ஆசிரியர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு
பக்கங்கள்: 89
விலை: ₹42
இது ஒரு குறும்படைப்பு.....ஒரே நாளில் படித்து முடித்து விடக் கூடியது என்ற வகையில் எடுத்த புத்தகம்......
ஆனால் இது தரும் தாக்கமோ மிகப் பெரியது......ஆண்டாண்டு
காலமாக சக மனிதர்களாலேயே விரட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு ஓடி ஒளிந்த பட்டியல் பழங்குடி
ஜாதியைச் சேர்ந்த ஒருவர் நாட்டிலேயே உயர்ந்த தேர்வு எனச் சொல்லப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்ந்த பதவியில் அமர்ந்த போதும் அந்த
நாற்காலிக்குரிய எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தி
எந்த வித மாற்றங்களையோ, மக்களுக்கான உதவிகளையோ செய்யவிடாமல் தடுக்கப்பட்டு,
அதன் வழியாக
தனது சாதியை அவருக்கு தினமும் நினைவூட்டி வதை செய்யும் சுற்றுப்புறமும்
கொண்ட.....அந்தப் பதவியைக் கொண்டு தான் உயர்ந்து விட எண்ணியே மணம் புரிந்து கொண்ட
மனைவியையும்.....தான் வாழ்ந்த வாழ்க்கையை தன் மகன் ஒரு நாள் கூட வாழ்ந்திடப்
பொறுக்காத....ஆனால் அந்த வாழ்க்கையை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னையையும்
கைவிட முடியாத, அந்தஸ்த்தில் உயர்ந்த ஓர் அரசு அதிகாரியின்
வாழ்க்கையையும்....நாற்காலியில் உட்காரும் முதல் தலைமுறையாக அதன் பாரங்களைத்
தாங்கவும் முடியாமல் அந்த ஒரு நாற்காலியை தான் நீங்கினால் மறுபடி அதை தன் இனத்தாலே
பிடிக்க முடியாதென்று தெரிந்து இன்னும் நூறு நாற்காலிகள் வேண்டுமென்பதற்காக அதை
அவர் பிடித்து அமர்ந்திருப்பதுமே கதைக்களம்.........
சில துளிகள் மட்டும் பின்வருமாறு.....
"அதிகாரம் என்பது ஒவ்வொரு அதிகாரியாலும் தன்னால்
கையாளப்படுவதாக உணரப்பட்டாலும்கூட அது எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடுதான்.
"
"ஒட்டுமொத்த அதிகாரத்தின் செயல்திட்டத்துடன் சரியாக
இணைந்துகொள்வதன் மூலமே தனி அதிகாரிக்கு அதிகாரம் கைவருகிறது. தனித்துச்
செல்லும்தோறும் அதிகாரம் இல்லாமலாகிறது."
"அதிகாரத்திற்கான தார்மீகப் பொறுப்புகள் அனைத்தையும்
ஏற்றுக்கொண்டு அதிகாரமின்றி வாழும் நரகத்தில் நான் சென்று விழுந்தேன். "
‘‘ தைரியம் வேண்டும்” என்றார். ‘‘ நூறு தலைமுறையாக
ஓடியாகிவிட்டது. இனிமேல் அமர வேண்டும்.”
"அமர வேண்டும். இந்த பிச்சைக்காரக் கிழவியைப் புதைத்து இவளது
இதயம் அதன் அத்தனை தாபங்களுடனும் மட்கி மண்ணாகவேண்டுமென்றால் எனக்கு இன்னும் நூறு
நாற்காலிகள் வேண்டும்."
நிச்சயம் நீங்களும் படியுங்கள்.......
யாருக்காக அழுதான் - தமிழ் நாவல் மதிப்பீடு
நூல்: யாருக்காக அழுதான்
பக்கங்கள்: 112
ஆசிரியர்: ஜேகே
Audio book
Storytel app
குரல்: T.குலசேகரன்
இப்போதெல்லாம் கிண்டிலிலிருந்து கொஞ்சம் மடைமாற்றம் செய்து
கண்களுக்கு ஓய்வளித்து....Storytel ல், மனதை ஓரளவிற்கு ஒருமுகப்படுத்தி கதையைக் கேட்க
முடிகிறது. அதற்கேற்றார்போல் கதை படிப்பவர்களும் குரலில் ஏற்ற இறக்கங்களுடனும்
உணர்ச்சிகளுடனும் படித்துக் காட்டுகிறார்கள்.இக்கதைக்கு திரு.குலசேகரன் அவர்கள்
நன்றாகவே குரல் கொடுத்திருக்கிறார்.
ஜேகே-வின் கதை....அதற்கு மேலும் ஏதேனும் விமர்சனம் வேண்டுமா
என்ன?...எல்லா காலங்களிலும் எல்லாவிதமான மனிதர்களும் வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறார்கள் என்பது இம்மாதிரியான கதைகள் மூலம் தான் அறிந்து கொள்ள
முடிகிறது.இந்தக் காலகட்டத்திலேயே பெருமாள்முருகன் போன்ற எழுத்தாளர்கள் தம்
கதைகளுக்காக கடும் விமர்சனங்களுக்குள்ளாக்கப்படும் நிலையில் ஜேகே, தி.ஜானகிராமன்
போன்றவர்களை அவர்களது எழுத்துக்காக என்னென்ன விமர்சனங்களைக் கேட்டிருப்பார்கள் என
எண்ணத் தோன்றுகிறது...
ஆனால் அவர்களின் காலத்திற்குப் பின்னர் எப்போதும்
கொண்டாடுகிறோம்.... எழுத்தாளனை சம காலத்தில் கொண்டாடும் நிகழ்வுகள் எப்போது
நிகழும்....
ஒரு லாட்ஜ்...அதில் தங்கியிருக்கும் நான்கைந்து மனிதர்கள்,
அதன் முதலாளி
மற்றும் வேலையாட்களுக்கிடையேயான கதை...
ஜேகே தனது கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் அமைப்பிலேயே
நம்மைக் கொள்ளை கொண்டுவிடுகிறார். லாட்ஜில் தங்கியிருப்பது ஒரு சூதாட்டக்காரனும்
அவனது நண்பனும், ஒரு அறையில் ஒரு தாசி, அவர்கள் யாராக இருந்தால்
என்ன தினப்படி வாடகை சரியாக வந்து விடுகிறதா என்று பார்க்கும் முதலாளி, சமையல்கார
நாயுடு, சில சராசரியான பணியாட்கள் இவற்றுடன் எல்லாரையும் ஆண்டவனே என அழைத்து கூப்பிட்ட
குரலுக்கு உடனே வந்து பணியாற்றும் நேர்மையான நம் நாயகன் ஜோசப்பு.....
ஜோசப்பின் பூர்வீகம் மற்றும் அவன் வாழ்க்கை பற்றி ஒரு இரவு அறிய நேரும் போது நாயுடு வியந்து போய்விடுகிறார்..... அன்றைய இரவே அங்கு தங்க
வரும் குடிகார சேட் ஒருவரின் பர்ஸ் கீழே விழ ஜோசப்பு அதை அவரிடம் திரும்ப
எடுத்துக் கொடுக்க, அவர் அதில் நிறைய பணம் உள்ளது தன்னிடமிருந்தால்
தொலந்துவிடுமென எண்ணி முதலாளியிடம் பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு கொடுத்ததை
காலையில் மறந்துவிடுகிறான்.
முதலாளி அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள எண்ணுகையில்
ஜோசப்பு மேல் அனைவரின் சந்தேகப் பார்வையும் திரும்புகிறது.ஆனால் ஜோசப்பு
காந்தியின் மூன்று குரங்குகள் பொம்மையால் உந்தப்பட்டு, முதலாளியிடம் பர்ஸ்
இருப்பது தெரிந்தும், கெட்டதைப் பேசக்கூடாது என்பதன் அடிப்படையில் மௌனம்
சாதிக்கிறான்.அடிபட்ட நிலையிலும் தான் எடுக்கவில்லை என்பதைத் தவிர வேறு ஏதும்
பேசவில்லை.
ஊருக்குச் சென்றிருந்த நாயுடு, திரும்பிவந்து அடிபட்ட
நிலையிலிருந்த ஜோசப்பைப் பார்த்து ஆக்ரோஷம் கொள்கிறார்.அப்பிரச்சினைக்கான தீர்வு
அவர் மூலம் வருகிறது.ஜோசப்பு குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டதற்கு பின்னர்,
அதுவரை அழாமல்
இருந்த ஜோசப்பு பெருங்குரலெடுத்து அழுகிறான்.
அவன் யாருக்காக அழுதான் என்பதை அப்புத்தகத்தைப் படித்து
ஜோசப்பையும் அவன் மனைவியை அவன் நடத்திய விதத்தையும் தெரிந்து கொண்டவர்களால்
மட்டுமே அறிய முடியும்.....
ஜேகே வின் நாவல்கள் தரும் தனியுணர்வுகள் உணர மட்டுமே
முடிகிறது.....விவரிக்குமளவு வார்த்தைகள் கிடைப்பதில்லை எப்போதும்...
போர்க்கலை வடிவில்- வாழ்கை பாடங்கள்
நூல்: சுன்- சூ வின்
போர்க்கலை
ஆசிரியர்: சுன் சூ
தமிழில்: இரா.நடராஜன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம்
பக்கங்கள்: 224
உலகப் புகழ்பெற்ற, போர்த்தந்திரங்கள் அடங்கிய சீன நாவலான போர்க்கலையின் தமிழ் வடிவமே இந்நூல்....
பண்டைய போர்த் தந்திரங்களை பின்வரும் தலைப்புகளில்
வகைப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
1.திட்டங்கள் தீட்டுதல்
2.போர்புரிதல்
3.தந்திரத் தாக்குதல்
4.போர்த்தந்திர வியூகங்கள்
5.ஆற்றல்
6.பலவீனமான ஸ்தானங்களும், பலம் வாய்ந்த ஸ்தானங்களும்
7.இராணுவ வியூக நடவடிக்கை
8.போர்த்தந்திரங்களை மாற்றியமைத்தல்
9.இராணுவப் பிரயாணம்
10.நிலப் பரப்பு
11.ஒன்பது நிலவரங்கள்
12.நெருப்புத் தாக்குதல்
13.ஒற்றர்களைப் பயன்படுத்துதல்
இந்நூலானது சீனாவில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளில் மொழி
பெயர்க்கப்பட்டு பல நாடுகளின் ராணுவ வேதமாகப் போற்றப்படுகிறது.
சீனப் புரட்சியாளர் மாசேதுங்,வியட்நாமின் ஹோசிமின்,கியூபாவின்
பிடல்காஸ்ட்ரோ ஆகியோர் தமது போர்களில் இந்நூலின் தத்துவங்களைப் பின்பற்றியுள்ளதாக
ஆசிரியர் தெரிவிக்கிறார்.
போர்த்தந்திர விதிகளையும் அவ்விதிகள் பயன்படுத்தப்பட்டதன்
காரணமாக வென்ற போர்க்களங்களக் கதைகளையும் எடுத்துக்காட்டுக்களுடன்
எடுத்துரைக்கிறது இந்நூல்.
நூலின் சில துளிகள்.
"தாக்கும் திறன் பெற்றவர்களாக நாம் இருக்கின்ற பொழுது,
தாக்கும் திறன்
அற்றவர்களாக நாம் தோன்ற வேண்டும்; நம் படைகளை நாம் உபயோகிக்கின்ற பொழுது, நாம் செயலற்று
இருப்பது போல் தோன்ற வேண்டும்; நாம் எதிரிக்கு அருகாமையில் இருக்கின்ற பொழுது, நெடுந்தூரத்துக்கு
அப்பால் இருப்பதாக அவனை நம்பச் செய்ய வேண்டும்; நாம் நெடுந்தூரத்துக்கு
அப்பால் இருக்கின்ற பொழுது, அவனுக்கு அருகாமையில் நாம் இருப்பதாக அவனை நம்பச் செய்ய
வேண்டும்."
"ஒரு இராஜ்ஜியம் அந்த இராஜ்ஜியத்திற்கு வெளியே இருந்து
ஆளப்படக் கூடாது; ஓர் இராணுவம் அந்த இராணுவத்திற்கு உட்புறமிருந்து
வழிநடத்தப் படக்கூடாது. போர் நடக்கும் சமயத்திலோ அல்லது எதிரிக்கு மிக அருகாமையில்
இருக்கும் பொழுதோ தளபதி தன் துருப்புக்களின் மத்தியில் இருக்கக் கூடாது. மாறாக,
சிறிது
தொலைவுக்கு அப்பால் இருக்க வேண்டும். இது உண்மைதான்! அவன் மொத்த நிலவரத்தையும்
தவறாகக் கணித்து, தவறான உத்தரவுகளைப் பிறப்பித்து விடக் கூடிய சாத்தியக்கூறு
ஏற்பட்டுவிடும்!"
"இராணுவ மண்டலமும் அரசியல் மண்டலமும் முற்றிலும் வெவ்வேறானவை. இராணுவத்தை மென்மையாகக் கையாள முடியாது. மேலும், மனிதநேயம் மற்றும் நியாயம் ஆகியவை ஒரு தேசத்தை ஆள்வதற்குரிய கொள்கைகள்தானே யொழிய, ஓர் இராணுவத்தை நிர்வகிப்பதற்கு உரியவை அல்ல! மற்றொரு வகையில் பார்க்கும் பொழுது, சந்தர்ப்பவாதம் மற்றும் வளைந்து கொடுத்தல் ஆகியவை இராணுவப் பண்புகள் தானேயன்றி அரசியல் பண்புகள் அல்ல!'
"ஒரு நாட்டின் நிலப்பரப்பை, அதன் மலைகள் மற்றும்
காடுகளை... படுகுழிகள் மற்றும் செங்குத்துச் சரிவுகளை... சதுப்பு நிலங்கள் மற்றும்
சகதிப்பிரதேசங்களை... நன்கு அறிந்திருந்தாலன்றி, இராணுவத்திற்குத் தலைமை
தாங்கி அந்நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் தகுதி நமக்கு இல்லை."
"தாய்நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் ஓர்
இராணுவத்திற்கு இடையூறு விளைவிக்காதே." தனித்துவமிக்க இந்த அறிவுரைக்கு உரையா
சிரியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கின்றனர்:- வீடு திரும்ப மனம் தீர்மானித்து
விட்ட ஒருவன், அவன் பாதையில் இடையூறு விளைவிப்பதற்காகச் செய்யப்படும் எந்த
முயற்சியையும் எதிர்த்து உயிரைத்துச்சமென மதித்து அச்சமின்றிச் சண்டையிடுவான்.
ஆகவே, சண்டையிட்டெல்லாம் அவனைச் சமாளித்து விட முடியாது; அவ்வளவு ஆபத்தானதோர் எதிரி
அவன். 'விழைவுடன் வீடுநோக்கித் திரும்பி வரும் படைவீரன் வெல்ல வொண்ணாதவன்'.
"
"துருக்கிப் பழங்குடியினரை அடக்கி ஒடுக்குவதற்காக படையுடன் அனுப்பப்பட்டான் பியே-ஷங்-ஜீயென். 'இரவில் வழக்கம்போல் முகாம் அமைத்தான். சுற்றுச் சுவரும் அகழியும் அமைக்கப்பட்டு முழுமையாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திடீரென ஓர் உத்தரவு பிறப்பித்தான். "இராணுவம் தன் இருப்பிடத்தை அருகிலுள்ள ஒரு மலைக்கு மாற்ற வேண்டும்" என்பதுவே அந்த உத்தரவு. இது அவனுடைய உபதளபதிகளுக்கு அதீத அதிருப்தியைத் தந்தது.
இந்த மாற்றம் படைவீரர்களுக்கு கூடுதல் களைப்பைத் தரும் என்று அவர்கள் எதிர்ப்புக் கூக்குரல் எழுப்பினர். பியே-ஷங்-ஜீயென் அவர்களின் எதிர்ப்புகளுக்குச் செவி மடுக்காமல், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முகாமை மாற்றினான்.
அன்று இரவு, ஒரு பயங்கரமான புயல் வீசியது. முன்பு அவர்கள் முகாம் அமைத்துத் தங்கியிருந்த இடத்தைப் பன்னிரண்டு அடி ஆழம் நீரில் மூழ்கடித்தது. எதிர்ப்புத் தெரிவித்த உபதளபதிகள் அக்காட்சியைக் கண்டு அதிசயித்துப் போயினர்.
தாங்கள் தவறாகச் செயல்பட்டு விட்டதை ஒப்புக் கொண்டனர். "என்ன நடக்கப் போகிறது என்று எப்படி அறிந்தீர்கள்?" என்று அவர்கள் கேட்டனர்.
பியே-ஷங்-ஜீயென் அதற்கு
பதிலிறுத்தான்: "இப்பொழுது முதல், தேவையில்லாத கேள்விகளைக் கேட்பதை விட்டுவிட்டு,
கட்டளைகளுக்குக்
கீழ்ப்படிந்து நடப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள்!"
கத்தியும் இரத்தமுமான இப் "போர்க்கலை" யைக் கற்றால்....
தற்போதைய, கத்தியில்லாத, ரத்தமில்லாத ஆனால் துரோகங்கள் சூழ்ந்த, நம்
கண்ணுக்குத் தெரியாத பனிப் போர்க்களங்களில் தினந்தோறும் போராடும் நமக்கு, பல்வேறு
வகைகளில் உதவியாக இருக்கும்.......
அறிவு வளர்ந்தா அணுக்கம் போயிடுது நீ பெருசா நான் பெருசான்னு... 04.07.26 9.57am