இப்போது உயிரோடிருக்கிறேன் - தமிழ் நாவல் விமர்சனம்
நூல்: இப்போது உயிரோடிருக்கிறேன்
ஆசிரியர்: இமையம்
பக்கங்கள்: 256
எழுத்தாளர் இமையத்தின் எழுத்தில் 'பெத்தவன்' மற்றும் 'எங் கதெ'
ஆகிய
குறுங்கதைகளைத் தொடர்ந்து, நான் வாசிக்கும் மூன்றாவது புத்தகம் இது.
சம காலத்தில் நம் கண்ணெதிரே நிகழ்ந்து
கொண்டிருக்கும், ஆனால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத பல விஷயங்களை, நமக்கு நடக்காத
வரை எந்த பாதிப்பும் இல்லை எனக் கடந்து செல்கிறோம்.
ஆனால் அந்த விஷயங்களை தொடர்ந்து தன்
கதைகள் வழியாகப் பதிவு செய்து வருகிறார் எழுத்தாளர் இமையம்.
இந்நூலில் கதாநாயகன், தனது கதையை தானே
சொல்வதுபோல் அமைத்துள்ளார்.
சொந்த ஊரில் ஒரு ரைஸ் மில் மற்றும் கொஞ்சம் நிலம் வைத்துக்
கொண்டு, பின்னர் காசு தருகிறேன் என்று சொன்னால் கூட முகம் சுளிக்காமல் மறுக்காமல்
அரிசி/மாவு அரைத்துக் கொடுக்கும் தந்தை. அவ்விதமான செயல்களுக்காகவும், ரைஸ் மில்லில்
மாவரைக்க வரும் அனைத்துப் பெண்களும் தன் கணவனைக் கவருவதாகக் கருதுபவருமான
மனைவி(இதில் எனக்கு அவர் தன் கணவன் மீது கொண்ட அளவில்லாத அன்பை வெளிப்படுத்துதாகவே
நான் கருதுகிறேன்). ஒரு பதினைந்து வயது பள்ளி செல்லும் சிறுவன் மற்றும் ஒரு பெண்
பிள்ளை என அழகான சிறிய குடும்பம்.
அச்சிறுவன் ஒரு நாள் காய்ச்சல் என்று வர, உலக வழக்கமாக
மெடிக்கல் வைத்திருப்பவரிடம் ஊசி போட்டுக் கொண்டு மாத்திரை வாங்கித் தருகிறார்
தந்தை. மறுநாளும் இரண்டு மூன்று ஊசிகள் போடப் படுகின்றன. இரண்டு மூன்று
நாட்களுக்கு மேலாகியும் காய்ச்சல் சரியாகாத நிலையில், உடல் நிலை சரியாகாமல்
வலிப்பு வருகிறது சிறுவனுக்கு. மெடிக்கல்காரர் சிறுவனை மருத்துவமனையில்
சேர்க்குமாறு கூறியதன் அடிப்படையில் மருத்துவமனையில் சோதிக்கும் போது, சிறுவனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தது தெரிய வருகிறது.
அதனைத் தொடர்ந்து அந்தச் சிறு
குடும்பமானது நகரத்தின் மருத்துவமனையில் அடி எடுத்து வைத்து என்னென்ன அவலங்கள்
படுகிறது, அல்லல்கள் படுகிறது என்பதை அச்சிறுவன் வாயிலாக வாயிலாகவே
கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது இந்த நெடுங்கதை.
டயாலிஸிஸ் செய்வதென்பதை தற்போது பரவலாக நாம் கேள்விப்படும்
நிலையில், இந்திய மருத்துவத் தலைநகரங்களில் ஒன்றாக அறியப்படும்
சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அச்சிறுவனைச் சேர்த்தது முதல் அவனுக்கு
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்கும் வரையில் அக்குடும்பம் மற்றும் அந்தச்
சிறுவன் படும் பாடுகளைப் படிக்கும் போது நவீன மருத்துவத்தின் கோரமுகம்
பயமுறுத்துகிறது.
பத்து வயது சிறுமி முதல் வயதானவர்கள் வரை டயாலிஸிஸ்
செய்யவேண்டிய நிலை, பணமிருந்தால் 'ஏ பிளாக்' பணமில்லை எனில் 'பி பிளாக்'.
என வகை
பிரித்து வைத்திருப்பது. ஆனாலும் சில டெஸ்டுகள் 'ஏ பிளாக்கில்' பணம்
கட்டித்தான் எடுக்க வேண்டும்...ஏ பிளாக்கில் ஏசி...பிரம்மாண்ட கட்டிடம்...உடனடி
மருத்துவம்...பி பிளாக்கில் காத்திருந்து மருத்துவம் பார்க்க வேண்டும், இன்பெக்சன் ஆக
வாய்ப்பிருக்கும் என, வரும் நோயாளியை ஏ பிளாக்கில் தங்க வைப்பதற்காக
பேசுவதற்காகவே ஒரு பெண்ணை வேலைக்கு வைத்திருக்கிறது மருத்துவமனை.
ஒரு நோயாளி டயாலிசிஸ் நடக்கும்போது, பசித்தால், தன் தாயை
பார்க்க வேண்டும் என்று தோன்றினால், நர்ஸ், தலைமை நர்ஸ் , வார்டு செயலர், செக்யூரிட்டி
வரை சொல்லி, திரும்பவும் அதே வரிசையில் தாண்டித்தான் அந்த தாய் தன் மகனை
பார்க்க வரமுடியும். அப்போது டாக்டர் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தால் அவர்
பார்த்து விட்டுச் செல்லும் வரை இருவரும் காத்திருக்க வேண்டும் குறைந்த பட்சம் 10
நிமிடங்களாவது
ஆகும் என்ற வரிகளைப் படிக்கும்போது நமக்கே ஆயாசமாக இருக்கிறது.
"சனங்க கிட்ட பேசுவதற்கு தானே டாக்டர்க்கு படிக்கிறாங்க
பேசாம இருக்க எதுக்கு படிக்கிறாங்க?" என்று அவனது தந்தை கூறும் போது அதன் வலியை உணர
முடிகிறது.
எதையுமே தெளிவாகச் சொல்லாதது, ஒன்றொன்றாகச் சொல்வது என
அச்சிறிய குடும்பத்தை ஏகமாக மிரட்டுகிறது நவீன தனியார் மருத்துவமனைச்
சூழல்.எதையாவது செய்து தன் பிள்ளையைக் காப்பாற்றிவிட மாட்டோமா என்று எண்ணும்
தந்தையின் மனப்போராட்டத்தினை மனதைப் பிசையும் வார்த்தைகளில் வடித்திருக்கிறார்.
யாரைப் பார்த்தும் பயப்படாத தன் தந்தை, இங்கு டாக்டர்
முன் கைகட்டி நிற்பதை வயது வந்த மகன் பார்க்கிறான். ஓடி ஆடி பள்ளி சென்று வந்த
பையன் நோயாளியாக இருப்பது எவ்வளவு சிரமம்....அவன் தனது எரிச்சலை தனது தாய் மீது
காட்டியபடியே இருக்கிறான். அத்தனையும் தாங்கிக் கொண்டு மகனிடம் சாப்பிடச் சொல்லிக்
கெஞ்சும் தாய் என கிராமத்துப் பெற்றோர் நம் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.
ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து, வீட்டை எதிர்த்துத்
திருமணம் செய்து, கொண்டு இரு பெண் குழந்தைகள் கொண்ட, தங்கள் சேமிப்பை எல்லாம்
மருத்துவமனையில் கரைத்துவிட்ட, ஒரு இளம் பெண் தன் கணவனைப் பற்றிக் கூறும்
வார்த்தைகள்...."பிழைக்கவும் மாட்டாரு சாகவும் மாட்டாரு."
நவீன மருத்துவத்தின் சாபக் கேடுகளில் ஒன்று இந்த மெடிக்கல்
வேஸ்ட்...."ஒரு நாளைக்கு ஒரு நோயாளிக்கு மட்டுமே இவ்வளவு குப்பைகள் என்றால்
ஒரு நாளைக்கு டயாலிசிஸ் வார்டில் எவ்வளவு குப்பைகள் சேரும்... ஒரு மாதத்துக்கு?
ஒரு ஆண்டுக்கு?
எனக்குள் நானே
சொல்லிக்கொண்டேன் 'இமயமலை அளவு'." இந்தக் குப்பைகள் வளர்ந்து
கொண்டே இருக்கின்றன.....
"நோயாளியை விட நோயாளி கூட இருக்கிறது ரொம்பக் கஷ்டம்"
என்ற வரிகளில் அந்தத் தாய் தந்தையர் படும் பாடுகள் நம் கண்முன் விரிகின்றன...
அச்சிறுவனுக்கு சிறுநீரகம் கிடைத்ததா? அவன்
பிழைத்தானா என்பதை புத்தகத்தில் காண்க...
நாவலில் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருந்த எழுத்தாளரின்
அனுபவமொழிகள் சில பின்வருமாறு...
"அரசாங்க ஆஸ்பத்திரினா மோசம், அரசாங்க பள்ளிக்கூடம்னா
மோசம், அரசாங்க ஆபீஸ்னா மோசங்கிற எண்ணம் எல்லாம் எப்படித்தான் சனங்களோட மனசுல
பதிஞ்சுதுன்னு தெரியல"
இப்போது உயிரோடிருக்கிறேன் - இமயம் - நாவல் மதிப்பீடு
"வாழறது தான் பெரிய பிரச்சினைன்னா சாவறது அதைவிட பெரிய
பிரச்சினையா இருக்கு. மண்ணு மாதிரி கல்லு மாதிரி இருந்தா எந்த பிரச்சினையும்
இருக்காது"
"தரயில கப்பலு ஓட்டுற மாரிதான்... உசுரோட இருக்குறது
லேசில்ல."
"பணம் எவ்வளவு இருக்கோ அந்த அளவுக்கு உசுரோட
இருக்கலாம்."
"உசிரோட இருக்கிறதுக்கும் அதிர்ஷ்டம் வேணும் சீக்கிரம்
செத்துப் போறதுக்கு அதைவிட அதிகமாக அதிர்ஷ்டம் வேணும்"
சமகால, சமூக மாற்றங்களைப் பதிவு செய்து கொண்டே இருக்கிறார்
ஆசிரியர்.....




No comments:
Post a Comment