எங்கதெ – இமையம் | தமிழ் புத்தக விமர்சனம்
நூல்: எங்கதெ
எழுத்தாளர்: இமையம்
பதிப்பகம்: க்ரியா
பக்கங்கள்: 149
எழுத்தாளர் இமையம் அவர்களின் "பெத்தவன்"
குறுங்கதைக்குப் பிறகு அவரது எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு அடுத்ததாகப் படிக்கத்
தெரிவு செய்த கதை....
புத்தகங்கள் படிக்க நேரமில்லாமல் சிறு இடைவெளி விழுந்த
நிலையில், 149 பக்கங்கள் என்பதால்
சீக்கிரம் படித்து முடித்துவிட எண்ணி எடுத்த புத்தகம்....ஒரே நாளில் கடும்
அலுவல்களுக்கிடையேயும் நம்மை விடாமல் படிக்கத் தூண்டி அப்புத்தகமே நம்மை விடாமல்
இழுத்து, நம்மைப் படித்து முடிக்க
வைத்துவிடும் வகையான எழுத்து....
விவசாயக் குடும்பத்தில் பிறந்து, மூன்று பாசக்காரத் தங்கைகளுடன் வளர்ந்தும் குடும்பத்தின்
ஒரே ஆண்மகன் என்ற காரணத்தாலும், படித்த பிள்ளை
என்பதாலும் காடுகரை வேலைகளைப் பார்க்கவிடாமல் செல்லமாக வளர்க்கும் கிராமத்துப்
பெற்றோர்.
எந்த சீரும் செய்யாத செய்ய முடியாதவனாய் இருந்தாலும், தங்களுக்குத் திருமணமாகி குழந்தைகள் பெற்று விட்ட நிலையிலும், தன் புருஷனின் சம்பாத்தியத்திலிருந்து எடுத்த பணத்தை தம்மக்களுக்கு பொங்கல் பணமாக வழங்குவதற்காக,தங்கள் அண்ணனின் பாக்கெட்டில் பணம் வைக்கும் பாசமிகு தங்கைகள் உடன் வளரும் ஒரு அண்ணன்.
எங்கதே - இமையம்
தன் முப்பத்தி மூன்று வயது
வரை எந்தப் பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்காத நல்லதொரு பையன், தடம்மாறி, தன்
ஊர்ப்பள்ளிக்கு வேலை நிமித்தம் வந்த, இரு குழந்தைகள்
கொண்ட ஒரு விதவைப்பெண்ணுடன் கொண்ட தொடர்பால், 10 ஆண்டுகள் தன் வாழ்க்கையை
தொலைத்து, அப்பெண் வேறு ஊருக்கு மாறுதலில் சென்ற போது வேறு
ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டதன் காரணமாக, அப்பெண்ணைக் கொன்று விடத் துணியும் நிலை வரை அவன் வாழ்க்கையை, அவன் மனப்போராட்டத்தினை அவன் வார்த்தைகள் வழியாகவே சொல்வதே 'எங் கதெ'.
பத்திரிக்கைகளில் பரவலாக தினந்தோறும் ஒரு செய்தியாக நாம்
இக்கதைகளைக் கடந்து வரும் நிலையில், அதன் பின்னே
உள்ள ஆண் மனதின் எண்ணங்களை விருத்தாசலம்
வட்டார வழக்கில் கதை நாயகனே நம்மிடம் பகிர்ந்து கொள்வதாகப் பதிவு செய்துள்ளார்
எழுத்தாளர்.
ஒரு விதவைப் பெண் இரு பெண் பிள்ளைகளுடன் புதிதாக ஒரு ஊரில் பணிநிமித்தம் குடியேறும் நிலையில் என்னவெல்லாம் பாடுகள் பட வேண்டியுள்ளது என்பதையும் நாயகனின் சொற்கள் வழியாகவே அறிய முடிகிறது.
தன் உடல் தேவைக்காகவும் பிற ஆண்களிடமிருந்து தன்னையும் தன் பெண்பிள்ளைகளையும் காத்துக் கொள்ளவும் கூட இவரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் எழுவதையும் நம்மால் தவிர்க்க இயலவில்லை.
எங்கதெ – உணர்வுகளின் மொழி | தமிழ் மதிப்புரை
ஒரு பெண்ணின் மனதில் என்னதான் இருக்கும் என்று
அறியத்துடிக்கும் ஆண்களின் பிரதிநிதியாய்த்தான் தெரிகிறார் நம் கதையின் நாயகன்.
இறுதியில் அதைத் தெரிந்து கொண்டாரா என்பதை நூலைப் படித்துத்
தெரிந்து கொள்ளலாம்.
ஆங்காங்கே வட தமிழ் நாட்டின் வட்டார வழக்குத் தமிழில்
எழுத்தாளர் கூறியிருக்கும் சில புது மொழிகள் தமிழில் காலம் கடந்தும் அழியாமல்
நிற்கும்....
"அப்பத்தான்
எனக்குத் தெரிஞ்சிச்சி நான் எறங்குன ஆறுல மறு கரை இல்லங்கிறது."
"எப்பவும்
எங்கம்மா எங்கிட்டெ கண்ணாலதான் பேசும். கண்ணுத் தண்ணியாலதான் பேசும்."
"விரியன்
பாம்புகிட்ட இருக்கிற விசத்துக்கு அதுவா பொறுப்பு?"
"கண்ணுத்
தண்ணியால எந்தக் கோட்டை கரையும்? ஒடையும்?"
இமையம் அவர்களின் அனைத்து நாவல்களையும் அடுத்தடுத்துப்
படித்து முடித்துவிடும் ஆவலை அவரது இந்த நாவலும் கூட்டுகிறது....

No comments:
Post a Comment