பெத்தவன் புத்தக விமர்சனம் | இமயம் | வாசிப்பு அனுபவம்
நூல்: பெத்தவன்
ஆசிரியர்: இமையம்
பக்கங்கள்: 40
வெளியீடு: பாரதி புத்தகாலயம்.
உயிர்மை இலக்கிய இதழில் வெளிவந்த, எழுத்தாளர் இமையத்தின் ஒரு சிறிய நெடுங்கதையே, 40 பக்கங்கள் கொண்ட தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது...
எவ்வளவோ நவீனத்துவங்கள் பெருகிவிட்ட நிலையிலும், யாராலும் ஒழிக்கப்பட முடியாத, சாதி என்ற அரக்கனுக்கு கௌரவக் கொலை என்ற பெயரில் பலி கொடுக்கப்படும் இளம் காதல் இணையர்களின் மற்றும் அவர்களைப் பெத்தவனின் கொலை/ தற்கொலைகளுக்குப் பின்னணியில் உள்ள ஊர் மற்றும் சாதிப்பஞ்சாயத்து என்ற பெயர்களில் நடக்கும் கொடூரங்களை தனது இக்கதையில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் ஆசிரியர்.
ஆசிரியரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றாலும் இக் கொடுமைகளைப் பற்றி எழுதுவதற்கும் தைரியம் வேண்டும் என்பதை கதை
மாந்தர்களே உணர்த்தி விடுகின்றனர்.
இருபது வருடங்கள் தவமாய்த் தவமிருந்து, பெற்ற மகளைக் கௌரவத்திற்காகக் கொலை செய்யுமாறு ஒரு தகப்பனை ஊர்கூடி நிர்பந்திக்கிறது...இருமுறை கொல்லுமாறு கூறியும் கொல்லாததால் அடுத்த முறை ஊரே அக்கொடூரத்தை அரங்கேற்றும் எனவும் அச்சுறுத்துகின்றனர்.
பெத்தவன் - இமயம்
எந்தெந்த வழியில் கொல்லலாம் எனவும் கொன்றவுடன்
எரித்துவிடவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு அனைத்தும் தயார் செய்து ஓர் இரவு மட்டும்
அத்தகப்பனுக்குக் கெடு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அக்குடும்பம் அந்த ஓர் இரவுக்குள் படும்
பாடுகளும் அவர்களுக்குள் நடக்கும் பேச்சுவார்த்தைகளுமே இக்கதை....
அந்தப் பெண்ணுக்கு எதிராக அவளின் தாய் உள்ளிட்ட அனைத்துப் பெண்களுமே பேசி அவளை கொல்வதற்கு உடந்தையாக இருக்கும் மனநிலைக்குப் பெயர்தான் என்ன?
தங்களால் செய்ய முடியாத ஒன்றை அப்பெண் செய்தது அந்தப்
பெண்களுக்கே பொறாமையாக உள்ளதா? எதனால் அதைச்
செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவே இயலவில்லை....
அப்பெண்ணை அந்தத் தந்தை கொல்லவில்லை எனில் சாதிப் பெருமைக்காக, அக்குடும்பமே தீயிட்டுக் கொளுத்தப்படும்...அல்லது அப்பெண்ணையும் அவளின் காதலனையும் ஊர்இளவல்கள் அனைவரும் கூடி சிதைத்துக் கொல்வார்கள்...அல்லது ஊரே சேர்ந்து அப்பெண்ணைக் கொன்று எரித்துவிடும்....
பெத்தவன் – இமயம் | தமிழ் புத்தக விமர்சனம்
சில
நேர்வுகளில் பெண்ணைப் பாசமாக வளர்த்து கொல்ல முடியாத தகப்பன் எனில் அந்தப் பெத்தவன்
ஊராரின் அழுத்தம் மற்றும் அவமானம் தாங்க முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொள்ள
வேண்டும்....இன்றளவும் நடைமுறையில் இருக்கும் இந்த காட்டுமிராண்டித்தனங்களை நாமும்
அனுதினமும் நாளிதழ்களில் படித்துக் கடக்கிறோம் எதுவுமே செய்ய இயலாமல்...
எங்கோ ஒரு பெண் அனுதினமும் இத்துணை வதைகள் பட்டுக்கொண்டே
இருக்கிறாள் என்ற எண்ணமே என்னைக் கொல்கிறது....
தன்னைச் சுற்றி நிகழ்காலத்தில் நடக்கும் அநியாயங்களை பதிவு செய்து அதன் மூலமாவது தீர்வு
வராதா எனத் தேடும் எழுத்தாளர் இமையம் அவர்களின் எழுத்து
காலத்திற்கேற்றது.....மாற்றங்கள் வேண்டும்....

