Monday, June 1, 2026

பச்சை நரம்பு - சிறுகதை தொகுதி வாசிப்பு

பச்சை நரம்பு - அனோஜன் பாலகிருஷ்ணன்

புத்தகம்: பச்சை நரம்பு

எழுத்தாளர்: அனோஜன் பாலகிருஷ்ணன்

பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்

பச்சை நரம்பு - தமிழ் சிறுகதை தொகுதி மதிப்புரை

வாசிப்பை நேசிப்போம் குழுவில் 2020 ன் பிற்பகுதியில் தான் இணைந்தேன்.

அதனால் 2020 க்கான வாசிப்பு மராத்தானில் பங்கேற்க இயலவில்லை..

குழுவின் செயல்பாடுகளை ஒரு பார்வையாளராக மட்டும் கவனித்து வந்தேன்...கடந்த ஆண்டு இரு புத்தகங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுதியதாய் நினைவு....

வாசிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்து இருந்தாலும், வீட்டிலேயே ஒரு சிறு நூலகம் அளவுக்கு புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தும் இலக்கு வைத்து வாசித்ததில்லை...வாசித்த நூலுக்குரிய விமர்சனங்களையும் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது.....‌

2021லிருந்து இலக்கு வைத்து வாசிக்கத் துவங்க 2020 டிசம்பரில் யோசித்திருந்தேன்...மாதம் இரண்டு புத்தகங்கள் என 25 புத்தகங்களை இலக்காக நிர்ணயிக்கலாம் என்பது எண்ணம்...

அதன்படி 2021 வாசிப்பு மராத்தானுக்கு எந்த புத்தகத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என யோசித்த போது எழுத்தாளர் திரு.பெருமாள் முருகன் அவர்கள் ஒரு இளம் எழுத்தாளரைப் பற்றி பத்திரிக்கையில் பாராட்டி எழுதியிருந்தது ஞாபகம் வந்தது...சரி அவரது புத்தகத்தை ஆண்டின் முதல் புத்தகமாக வாசிப்போம் என கிண்டிலில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தேன்.

10 சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பே அப்புத்தகம்...ஒவ்வொரு சிறுகதையும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் வெளியானதாகையால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வெவ்வேறு வகையான கலவையான உணர்வுகளைத் தருவதாக இருந்தன...

முதல் சிறுகதையைப் படித்து முடித்ததும் மனதில் எழுத்தாளரின் முகத்தைப் பார்த்தாக வேண்டுமே என்ற எண்ணம் துளிர் விட்டது.....

முகநூலில் அவரது பெயரை வைத்துத் தேடிப்பார்த்து வியந்து போனேன்....இவ்வளவு சிறுவயதில் எழுத்தில் எப்படி இவ்வளவு முதிர்ச்சி இருக்க முடியுமென்று....அவ்விளம் எழுத்தாளர் வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்திவிட்டு அடுத்தடுத்த சிறுகதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்....

பச்சை நரம்பு - அனோஜன் பாலகிருஷ்ணன் - சிறுகதை தொகுப்பு

ஆண்/பெண் பேதமின்றி இருவரின் மனநிலையையும் எவ்விதம் ஒரு எழுத்தாளரால் இவ்வளவு கச்சிதமாகப் பதிவு செய்ய இயலும் என ஆச்சரியப்படுத்துகிறார்... ஒவ்வொரு சிறுகதையும்.....யுத்த பூமியின் நிழல் படர்ந்த மக்களின் வாழ்க்கையை அனாயாசமாகப் பதிவு செய்து கொண்டே வரும் வேளையில் எவரும் எழுதத் தயங்கும், நொடியில் விரசமாகி விடக்கூடிய பாலியல் கதைகளையும் மிக நுட்பமாக எழுத்தில் வடிக்கக்கூடிய கலை இவருக்கு எளிதில் கைவந்திருக்கிறது.....

இலங்கைத் தமிழ் நமக்கு ஆங்காங்கே இடறினாலும் படிக்கும் வேகம் குறையவிடாத மொழிநடை இப்புத்தகத்தின் சிறப்பம்சம்.....

கண்டிப்பாக வாசிக்கலாம்....

 

No comments:

Post a Comment

இதை படித்துப் பாருங்கள்....

அணுக்கம்

 அறிவு வளர்ந்தா அணுக்கம் போயிடுது நீ பெருசா நான் பெருசான்னு... 04.07.26  9.57am