Monday, June 1, 2026

பேரீச்சை - அனோஜன் பாலகிருஷ்ணன் - சிறுகதை தொகுதி விமர்சனம்

பேரீச்சை - தமிழ் சிறுகதை தொகுதி மதிப்பீடு

நூல்: பேரீச்சை

ஆசிரியர்: அனோஜன் பாலகிருஷ்ணன்

பதிப்பகம்: காலச்சுவடு

பக்கங்கள்:135

அனோஜனின் இரு புத்தகங்களை கடந்த ஆண்டே படித்துப் பிடித்திருந்ததால்...புத்தகத் திருவிழாவில் காலச்சுவடு பதிப்பகத்தில் பார்த்ததும் வேறு யாராவது எடுத்துவிடப் போகிறார்கள் என்ற அவசரத்துடன் எடுத்துக் கையில் வைத்துக் கொண்டேன்....அருகில் யாரும் இல்லை என்பது பின்புதான் உறைத்தது....எல்லாருக்குள்ளும் எந்த வயதிலும் தனக்குப் பிடித்த பொருளை கடையில் பார்த்ததும் அள்ளிக் கொள்ளும் சிறுபிள்ளைத்தனம் இருந்து கொண்டேதான் இருக்கும் போலும்....

புத்தகத்திற்கு வருவோம்...

காலச்சுவடு, தடம், கல்குதிரை போன்ற இதழ்களில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த 8 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்..

சாய்வு, போர்வை, யானை, பேரீச்சை, கதிர்ச்சிதைவு, ஆடையுற்ற நிர்வாணம், கர்ப்பப்பை, உதிரம் ஆகிய தலைப்புகளின் கீழ் 8 சிறுகதைகள்...

பேரீச்சை - சிறுகதை தொகுதி விமர்சனம்

அனோஜனின் கதைகளின் ஊடே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நிகழ்ந்து கொண்டே இருக்கும் போது பொதுமக்களின் குடும்ப உறவுகள் பற்றி, அடுத்த நொடி சொந்தமில்லாத நிலையாமையில் வாழும் மக்களின் மனநிலையைப் பற்றி, சொந்த நாட்டிலேயே அகதிகளாகத் திரியும் நிலை பற்றி, நண்பர்களுக்குள்ளேயே தாள முடியாத அடிகள் மற்றும் தன் இன்னுயிர் காக்க தன் நண்பர்களையே காட்டிக் கொடுக்க நேரும் துரோகங்கள் பற்றி...அதைத் தன் வாழ்நாள் பூராவும் தன் மனதில் சுமந்து வாழ நேரும் அவலங்கள் பற்றி...அதிலும் பெண்கள் படும் பெரும்பாடுகள் பற்றி... வெளிநாடுகளில் புலம்பெயர் வாழ்க்கையின் அவலங்கள், கலாச்சாரப் புரிதலின்மைகளில் சிக்கித் தவிப்பது பற்றி... புலம் பெயர் குடும்பங்களில் வெளிநாடுகளில் பிறக்கும் இரண்டாம் தலைமுறையும் இருவேறு கலாச்சாரங்களால் குழம்பித் தவிப்பது...ஆகிய அனைத்தையும் கனத்த மனதுடன் அறிந்து கொள்ள முடிகிறது...ஒவ்வொரு சிறுகதை முடிந்து அடுத்த கதை படிக்க, நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒருநாளாவது இடைவெளி தேவைப்படுகிறது..

போர் சூழந்த வாழ்க்கையில் பெண்ணாகப் பிறப்பதும், தாய்மையடைவதும் வரமல்ல சாபம்....பெண்கள் அடையும் வலிகள் எத்துணை எத்துணை.....பெண் உடலின் இயல்பான உதிரத்துடன் போர்க்களத்தின் உதிரங்களையும் படித்துக் கடப்பதே பெரும்பாடாக இருக்கிறது எனில் வாழ்ந்து கடப்பதை எண்ணிக் கூடப் பார்க்க இயலவில்லை....

புத்தகத்தைக் கையில் எடுத்தால் படிக்க முடியாமல் கீழே வைக்கத் தோன்றுகிறது...வைத்துவிட்டால் வேறு வேலைகள் செய்யும் போதும் அப்புத்தகம் அங்கேயே இருக்கிறதா எனக் கண்கள் தேடிக்கொண்டே இருக்கிறது.....

ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்....என்ன வேண்டுமானாலும் செய்யும்...

இடையிடையே வாழ்வின் தீரா அங்கமான காதல்களையும் கலவிகளையும் அவை சார்ந்த உளவியல் பிரச்சினைகளையும் சொல்லிச் செல்கிறார் சில கதைகளில்....பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்த ஒரு புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் தன் ஐந்து வயதுப் பெண் குழந்தையை குளிப்பாட்டினான் என்ற காரணத்திற்க்காக அவனிடம் இருந்து விவாகரத்துக் கேட்கும்போது மாறுபட்ட இருவேறு கலாச்சாரப் புரிதலின்மையே வெளிப்படுகிறது...

பேரீச்சை - அனோஜன் பாலகிருஷ்ணன் - சிறுகதை தொகுதி மதிப்பீடு

மனித இனத்தில், கடந்த நூறாண்டுகளில் போர்களிலோ போர்க்கைதிகளை நடத்தும் விதங்களிலோ எவ்வித விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் இருப்பது மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலுக்குரியது என்பதை மனிதர்கள் என்றுதான் உணர்வார்களோ...... மனிதன் ஒரு மிகக் கேவலமான சமூக விலங்கு... பூமிக்கான சாபம்....

இவ்வளவு ரணகளத்திற்கிடையிலும் அனோஜனின் வர்ணனைகளும் கவர்கின்றன....

"உன் கேசங்கள் உயிருள்ள குட்டிப் பாம்புகளாக நெற்றியில் புரண்டன"....

"உன் கால்கள் மாசற்று உரித்த பனங்கிழங்கு போல் நீண்டிருந்தன"

"கலவியைவிட அதன் மீதான நினைவுகள் எத்தனை உக்கிரம் கொண்டவை"....

இலங்கைத் தமிழில் சில வார்த்தைகள்.. ஆங்காங்கே பொருள் புரியாமல் இடறினாலும், வாசிப்பது அவ்வளவு சிரமமாக இல்லை...

நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியவர் அனோஜன் என்பதில் ஐயமில்லை....

 

No comments:

Post a Comment

இதை படித்துப் பாருங்கள்....

அணுக்கம்

 அறிவு வளர்ந்தா அணுக்கம் போயிடுது நீ பெருசா நான் பெருசான்னு... 04.07.26  9.57am