ஆயிஷா - இரா. நடராசன் - நாவல் வாசிப்பு அனுபவம்
புத்தகம்: ஆயிஷா
ஆசிரியர்: இரா.நடராசன்
பக்கங்கள்: 24
ஒரு விஞ்ஞான கேள்வி பதில் நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய
முன்னுரையே இக்குறுங்கதை.
பத்தோடு பதினொன்றாக ஆசிரியப் பணியினை கடமையே எனச்
செய்துவந்த ஒரு விஞ்ஞான ஆசிரியரை தனது விடையறியா வினாக்களால் அவர்தம் நிலையை,ஆசிரியராக
அவரது கடமையை உணர்த்தி, அவர் பனிரெண்டு விஞ்ஞானக் கேள்வி பதில் நூல்களை எழுதும்
அளவுக்குத் தூண்டிய பத்தாம் வகுப்பு மாணவியே ஆயிஷா.....
எதையும் ஆழ்ந்து கற்கும் விருப்பம் உள்ள ஒரு மாணவி, கேள்விகளால்
தனது ஆசிரியர்களைத் திணறடிக்கும் மாணவியான ஆயிஷா, தற்போதைய கல்வி
முறையால்/பதில் தெரியாத ஆசிரியர்களால் தினமும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.
அந்தத் தண்டனையிலிருந்து தப்பிக்க வழிதேடி அவள் செய்த
முயற்சி ஒன்று மீளாத் துயரத்தில் சென்று முடிகிறது.
மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத, விரும்பாத,
பணிக்கு
வந்ததற்கு பின்னர் எதையுமே கற்காத, கற்கவும் விரும்பாத, ஆசிரியர் சமூகத்திடம் சுய
அறிவு கொண்ட மாணவி ஒருத்தி மாட்டினால் ஒன்று அவள், அவர்களது அடி தாங்க
முடியாமல் படிப்பை விட்டுப்போய்விட வேண்டும் அல்லது திருமணமாகிப் போய்
அடுப்படியில் இடிபட வேண்டுமென்ற நிலை இன்னும் தமிழ்நாட்டில் உள்ளது.
நகரங்களின் பெரிய பள்ளிகளில் கற்கும் மாணவியும் இதற்கு
விதிவிலக்கல்ல.....
ஆயிஷாவின் கேள்விகளில் ஒன்று...
"மிஸ்.கரோலின் ஏர்ஷல் போலவோ மேரி கியூரி போலவோ நம்ம நாட்டுல
பெயர் சொல்ற மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலியே...ஏன்?"
இக்கேள்விக்குரிய பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை.தங்கள்
சொந்த வீடுகளின் இருண்ட சமையலறையில் போய் அவர்கள் அதைத் தேடட்டும்....என
முடிக்கிறார் ஆசிரியர்...

No comments:
Post a Comment